search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்கு: தொழில் அதிபர் ரன்வீர்ஷா- கிரண்ராவ் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு
    X

    சிலை கடத்தல் வழக்கு: தொழில் அதிபர் ரன்வீர்ஷா- கிரண்ராவ் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு

    சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் தமிழகத்தில் இருந்து தப்பி சென்றிருப்பதாகவும் அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #Idoltheftcase
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடத்தல் சிலைகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது.

    கோப்புப்படம்

    போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிரண்ராவ் ராயப்பேட்டையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை.

    ரன்வீர்ஷா தனது வக்கீலை அனுப்பி வைத்திருந்தார். அவர் 28-ந்தேதி வரையில் ரன்வீர்ஷா ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இதனை விசாரித்த நீதிமன்றம் சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் அதனை ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.

    இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தாலேயே ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தப்பி ஓடி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தமிழகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து வெளி மாநில போலீசாரின் துணையுடன் ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருவரை பற்றியும் தகவல் தெரிந்தவர் துப்பு கொடுக்கலாம் என்றும் அவர்களது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

    ரன்வீர்ஷா, கிரண்ராவை பிடிக்க போலீசார் வேகம் காட்டி இருப்பதால் சிலை கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idoltheftcase #RanvirShah #KiranRao
    Next Story
    ×