search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனிவேல் - ரவி
    X
    பழனிவேல் - ரவி

    கோவில் நிலம் பட்டா போட்டு விற்பனை செய்து தொழில் அதிபரிடம் பணம் மோசடி - 2 பேர் கைது

    சென்னையில் கோவில் நிலத்தை போலி பட்டா போட்டு விற்பனை செய்து தொழில் அதிபரிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த சினிமா பட அதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சொந்தமாக ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகிறேன். சென்னையை அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்த பழனிவேல் (48), அவரது நண்பர் ரவி (48) ஆகிய இருவரும் சென்னை ஜமீன்பல்லாவரத்தில், தங்களுக்கு சொந்தமான நிலம் என்று கூறி பட்டா போன்ற ஆவணங்களை காட்டி பெரிய அளவில் நிலத்தை பிளாட் போட்டு விற்றனர்.

    அதில் ரூ.79 லட்சம் கொடுத்து 2½ கிரவுண்டு நிலத்தை நான் வாங்கினேன். அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டி கம்பெனி ஒன்றை தொடங்குவதற்கு முடிவு செய்தேன்.

    இந்த நிலையில் பழனிவேலும், ரவியும் பட்டா போட்டு விற்ற நிலம், நெமிலிச்சேரியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில்நிலம் என்பதை உறுதி செய்தனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    நான் கொடுத்த ரூ.79 லட்சம் பணத்தை பழனிவேல் மற்றும் அவரது நண்பர் ரவியிடம் திருப்பித்தரும்படி கேட்டேன். ஆனால், அவர்கள் அடியாட்களை ஏவிவிட்டு என்னை மிரட்டினார்கள்.

    நிலம் வாங்கியபோது அவர்கள் கொடுத்த பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று தெரியவந்தது. 5½ ஏக்கர் கோவில் நிலத்தை அவர்கள் இதுபோல் அபகரித்து கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியிருக்கிறார்கள்.

    இந்த பணத்தில் பழனிவேல், நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ள ‘சாயா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். ரவி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர்களிடம் நான் ஏமாந்த ரூ.79 லட்சம் பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் செல்லமுத்து ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    பட அதிபர் பழனிவேலும், அவரது நண்பர் ரவியும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான பழனிவேல் ஏற்கனவே இன்னொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் ஆவார். தற்போது ஜாமீனில் வெளியே இருந்த அவர், மீண்டும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×