search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு - போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்
    X

    வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு - போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்

    நக்கீரன் கோபால் இன்று மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து தனக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். #NakkeeranGopal #Vaiko
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சம்பந்தப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் தகவல் வெளியிட்ட அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீதும், அந்த செய்திக்கு பொறுப்பானவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரின் துணை செயலாளர் செங்கோட்டையன் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் செய்திருந்தார்.

    இந்த நிலையில் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். நக்கீரன் கோபாலை பார்க்க போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து வைகோ ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    இந்த நிலையில் தனக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வைகோவை, நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    பின்னர் நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போலீசார் என்னை விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறினார்கள். என் மீது வழக்கு இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் வைகோ அங்கு வந்திருப்பதாக என்னிடம் கூறினார்கள். அவர் வந்ததால் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வழக்கறிஞர் என்ற முறையில் என்னை அவர் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.

    அவர் வருவார் என்று காத்திருந்தேன். அவர் உள்ளே வரவில்லை. அவர் எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். அப்போது அவர் சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறினார்கள்.

    எனது வக்கீலிடம் வைகோ ஏன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் தனி ஆளாக சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதாக கூறினார். இது பெரிய அளவில் பரவி விட்டது. அவரை கைது செய்துகொண்டு போய் விட்டனர் என்றார்.

    அதன் பிறகு என்னை வெளியே கொண்டு வந்தனர். அப்போது ஊடகத்தினர் அனைவரும் நிற்பதை பார்த்தேன். அதன் பிறகே எனக்கு நிம்மதி வந்தது. பின்னர் என்னை கோசா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.



    அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்து என்னை பார்த்தனர். வைகோ அங்கு எல்லோரையும் மிரட்டி விட்டதாகவும் தர்ணா செய்து பிரச்சினை ஏற்படுத்தி விட்டதாகவும், மு.க.ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார். கவர்னரின் முகத்திரையை கிழிக்க முதலில் புள்ளி வைத்தது வைகோதான்.

    பின்னர் என்னை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருமாவளவன், முத்தரசன் வந்தனர். கோர்ட்டில் விவாதம் நல்ல விவாதமாக இருந்தது. கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும் நீதிபதி சொன்ன தீர்ப்பின் மூலம் பெரிய நம்பிக்கை கிடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக எல்லோரும் ஒரே குரலில் நின்றதற்கு முதலில் புள்ளி வைத்தது வைகோதான். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-

    நக்கீரன் கோபால் ஜெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டார் என்று நான் கூறினேன். உயிருக்கு துணிந்து அவர் காடுகளுக்கெல்லாம் போய் வந்தவர். 2 வருடம் நான் ஜெயிலில் இருந்தது போல அவர் பொடாவில் இருந்தார். எனவே இதுபற்றி அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் இன்றைக்கு நக்கீரன் கோபாலுக்கு வந்தது நாளை மற்ற பத்திரிகைகளுக்கு தொலைக்காட்சிகளுக்கு வரலாம். தமிழக அரசியலுக்கு வரலாம். எனவே இதை ஒட்டுமொத்த பத்திரிகைகளும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    நீதிபதி கோபிநாத் 124-க்கு முகாந்திரம் இல்லை என்று சொன்னது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை என்று சொன்னேன். இந்த கவர்னர் போன்ற மோசமான கவர்னர் இதுவரை தமிழ்நாடு சரித்திரத்தில் வந்தது இல்லை. ஆட்சியை கலைப்பதற்கு கூட அறிக்கை அனுப்பிய கவர்னர்கள் உண்டு. ஆனால் இந்த பதவியை தவறாக பயன்படுத்தி ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டு மந்திரிகளையும், எம்.பி.க்களையும் உள்ளே விடாமல் அலுவலர்களை மட்டும் விட்டு நிர்வாகத்தை பற்றி விசாரணை செய்கிறார். அதற்கு தி.மு.க. எல்லா இடங்களிலும் கருப்பு கொடி காட்டியது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் மாதம் நக்கீரன் பத்திரிகையில் கட்டுரை வந்துள்ளதென்றால் அது தவறான செய்தி என்று கோர்ட்டில் முறையிடலாம்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னதும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவாக பேசியதும் எங்கே போலீசார் தப்பித் தவறி கைது செய்யப்போய் விடுவார்களோ என்று ராஜ்பவனுக்கு வரவழைத்து விருந்து உபசாரம் நடத்தியது மகா அயோக்கியத்தனம்.

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி ஊழல் நடந்துள்ளது என்று கூறுகிறார். எந்தெந்த துணைவேந்தர் நியமனத்துக்கு எவ்வளவு கைமாறியுள்ளது என்று நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. மந்திரி என்றால் நீக்க வேண்டியது தானே. கல்வியாளர்கள் கவர்னரிடம் பேசியதாக பொத்தாம் பொதுவாக அவர் கூறுகிறார்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. எங்கள் கோரிக்கை. இந்த கவர்னர் வந்ததில் இருந்து மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கிறார். இங்குள்ள அரசாங்கத்துக்கு முதுகெலும்பும் கிடையாது. சுயமரியாதையும் கிடையாது.

    இந்த நாட்டில் நீதியை காப்பாற்றும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நேற்றைக்கு நீதிபதி கோபிநாத் நிரூபித்து இருக்கிறார். நக்கீரன் கோபாலை நெருங்கி மூக்கறுபட்ட நிலையில் இனிமேல் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் தமிழக போலீசை ஈடுபடுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #NakkeeranGopal #Vaiko
    Next Story
    ×