search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்தால் எந்த பாதிப்பும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
    X

    போலியோ சொட்டு மருந்தால் எந்த பாதிப்பும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து பயன்படுத்தப்படவில்லை. அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. #PolioDrops
    சென்னை:

    குழந்தைகளை தாக்கும் போலியோ வைரஸ் 3 வகையானது. முதல் வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 வகை வைரஸ்களும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் உலகம் முழுவதும் ‘ட்ரைவேலண்ட்’ என்ற சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    இதன் மூலம் 2 வகையான போலியோ வைரஸ் பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

    நாடு முழுவதும் இந்த ‘ட்ரைவேலண்ட்’ சொட்டு மருந்து 2016 வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் 2-வது வகை போலியோ வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டதால் 2016-க்கு பிறகு பை-வேலண்ட் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து நிறுத்தப்பட்டு தற்போது பை-வேலண்ட் சொட்டு மருந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    பிறந்த குழந்தைகளுக்கு இவ்வகை சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. 1½ மாதம், 2½ மாதம், 3½ மாதம் மற்றும் 1½ வயது போன்ற காலங்களில் இந்த சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒழிக்கப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து கம்பெனி மத்திய அரசுக்கு வினியோகம் செய்துள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை அதனை உத்தரபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சப்ளை செய்துள்ளது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து, தடுப்பூசியும் போடப் பட்டது.

    ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அந்த மருந்தை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்ததில் அவை ஏற்கனவே நிறுத்தப்பட்ட மருந்து என தெரியவந்தது.

    தொடர் கண்காணிப்பின் மூலம் நிறுத்தப்பட்ட மருந்து மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை வினியோகம் செய்த அந்த மாநிலங்களிலும் மருந்து சப்ளை நிறுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நிறுத்தப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ போலியோ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து நிறுவனம் தவறுதலாக அனுப்பி இருந்ததை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து கண்டு பிடித்ததையடுத்து அந்த மருந்து வினியோகம் செய்த 3 மாநிலங்களில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம் போல தற்போது ‘பை-வேலண்ட்’ சொட்டு மருந்து, தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை.



    பொதுமக்கள் போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து வினியோகம் செய்யப்படவில்லை.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

    ட்ரை வேலண்ட் சொட்டு மருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படவில்லை. எப்போதும் அனைத்து மருந்துகளும் 6 மாதம் இருப்பு வைக்கப்படும். அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை.

    தொடர்ந்து சொட்டு மருந்து கொடுக்கலாம், ஊசியும் போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PolioDrops

    Next Story
    ×