search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் 11-ந் தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X

    திருப்பரங்குன்றத்தில் 11-ந் தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    வருகிற 11-ந் தேதி மீண்டும் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #EdappadiPalaniswami #ADMK

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அ.தி.மு.க. வென்ற தொகுதி என்பதால் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க.வினர் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொகுதி முழுவதும் விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந் தேதி மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 16 அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இதனிடையே நாளை (7-ந் தேதி) அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார்.

     


    இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை வருகிற 11-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி மீண்டும் மதுரை வருகிறார். அன்று காலை 10 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள பழ மார்க் கெட்டை திறந்து வைக்கிறார்.

    அந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    மாலை 6 மணியளவில் திருப்பரங்கன்றத்தில் இடைத்தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்து வருகிறார்கள். #EdappadiPalaniswami #ADMK

    Next Story
    ×