search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    132 சிலைகளும் கோவில்களில் திருடப்பட்டதா?- ரன்வீர்ஷாவுக்கு சம்மன்
    X

    132 சிலைகளும் கோவில்களில் திருடப்பட்டதா?- ரன்வீர்ஷாவுக்கு சம்மன்

    பண்ணை வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். #PonManickavel
    சென்னை:

    சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சோதனை நடத்தி கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.

    இதன் பின்னர் திருவாரூர், திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவின் அரண்மனைகளிலும் சோதனை நடந்தது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    30-க்கும் மேற்பட்ட போலீசார் நடத்திய சோதனையில் 89 சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. முருகன், பெருமாள், அம்மன், நந்தி உள்ளிட்ட கற்சிலைகளும், அலங்காரம் மிக்க பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் 2 லாரிகளில் ஏற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதேபோல் தாம்பரம் அருகே கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவின் இன்னொரு பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் 43 சிலைகள் சிக்கியது. 2 வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பழமை வாய்ந்த கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புகிறார்கள். இதனை ஏற்று ரன்வீர்ஷா ஆஜராகும்போது 132 சிலைகளின் பின்னணியை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது. #IdolSmuggling #PonManickavel #IdolTheft #RanveerShah 
    Next Story
    ×