என் மலர்
செய்திகள்

தமிழ்நாட்டில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரே கட்டணம் ரூ.500 நிர்ணயம்
சென்னை:
தமிழ்நாட்டில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டணம் ஒரே மாதிரி இல்லாமல் பல்வேறு வகைகளில் இருந்தது. இப்போது ஒரே கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாண ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ‘அம்ருத்’ திட்ட விதிகளின்படி, தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடி, ஆன்லைன் முறையில் கட்டிட அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான கட்டணங்கள் ஒரே சீரான நடைமுறை இல்லாமல் இருந்தது. இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு இனி ஒரே மாதிரியான கட்டண நடை முறை அமல்படுத்தப்படும்.
இதன்படி கட்டிட அனுமதி கோரி இணைய வழி வாயிலாக விண்ணப்பம் செய்பவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
கட்டணங்களை இணைய வழியில் பெறுவதற்கும், நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் திட்ட அனுமதி வழங்கும் அதிகாரி ஆகியோர் டிஜிட்டல் கையெழுத்து முறையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த மாறுதல்கள் அனைத்தும் அக்டோபர் 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.