என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே செம்பட்டி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் தோட்டம் வைத்து தென்னை சாகுபடி செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு பாய்ச்சினார்.
இருந்தபோதும் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் வேலுச்சாமியின் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் கருகத் தொடங்கின எவ்வளவோ முயற்சி செய்தபோதும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை.
தன் கண் முன்னே தென்னை மரங்கள் கருகியதால் கடும் மன உளைச்சலில் இருந்தார். எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். அதன்படி விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
வறட்சியின் காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.