search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்
    X

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்

    நாமக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன் (வயது 47). இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 21-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் வீசப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொக்கி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் பொட்டணம் கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, ஆத்துக்குழிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்திரா (47) என்பருக்கும், கொக்கி கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக போலீசார், ஆத்துக்குழிப்பள்ளம் பகுதிக்கு சென்று சந்திராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கொக்கி கிருஷ்ணனும், சந்திராவும் சேந்தமங்கலம், நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழங்கு வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சந்திராவின் கணவர் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்திரா தனிமையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவர் கிழங்கு வியாபாரம் தொடர்பாக கொக்கி கிருஷ்ணனுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் இது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

    கொக்கி கிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரா வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கொக்கி கிருஷ்ணன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றபோது, அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனால் சந்திரா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார். இது பற்றி கேட்க அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.

    இதற்கிடையே சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கடந்த மாதம் 20-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் திடீரென சந்திரா வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவரிடம், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அதற்கு சந்திரா முடியாது. நீ வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளாய். என்னுடைய வீட்டிற்கு இனிமேல் வராதே என்று கூறினார்.

    இதனால் கொக்கி கிருஷ்ணன் அவருடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உடனே உதவிக்கு சந்திரா, பக்கத்தில் வசித்து வரும் கள்ளக்காதலன் வடிவேலை அழைத்து வந்தார். வீட்டில் வைத்து தகராறு கடுமையாக ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரா, வடிவேல் இருவரும் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை கட்டையால் தாக்கினர். தலையிலும் தாக்கி ,கீழே தள்ளினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கொக்கி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர், இறந்து விட்டதை அறிந்த இருவரும் என்ன செய்வதென தெரியாமல் பதறினர்.

    நடந்த இந்த சம்பவம் குறித்து திருமலைப்பட்டியில் வசித்து வரும் தனது மகள் புவனேஸ்வரிக்கு தெரிவித்து, உடனே வீட்டிற்கு வருமாறு கூறினார். மகள் புவனேஸ்வரியும், இரவோடு இரவாக புறப்பட்டு தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு பிணமாக கிடந்த கொக்கி கிருஷ்ணனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி ஒரு மொபட்டில் வைத்து, தாயும், மகளும் நேராக கொண்டு சென்றனர். பின்னால் வடிவேல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டனர்

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சந்திரா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவரை போலீசார் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது மகள் புவனேஸ்வரி மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×