search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை நடக்கும் பந்த்க்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    நாளை நடக்கும் பந்த்க்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை எதிர்கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

    சென்னை:

    மத்தியில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து அனைத்து துறைகளையும் சீரழித்த காங்கிரசும் அதற்கு துணை போன தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுவதற்காக ‘பந்த்’ அறிவித்துள்ளன.

    மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. பெட்ரோல்-டீசல் விலையை மனம்போல் உயர்த்துவோம் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைப்பார்களா? எங்களுக்கும் இந்த விலை உயர்வில் விருப்பம் இல்லை தான். ஏன் விலை ஏறுகிறது? இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதை யோசிக்க வேண்டும்.

    மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் தேர்தல் ஆதாயத்துக்காக எண்ணெய் நிறுவனங்களை கடனில் தள்ளினார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்தன. அந்த கடனை அடைக்க வேண்டாமா? அவர்கள் செய்த தவறுகளை திருத்தி வருகிறோம். அதனால் சில சிரமங்களை மக்களும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசும் அதைத்தானே விரும்புகிறது. ஆனால் மாநில அரசுகளின் நிலை என்ன?

     


    ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அந்த கவுன்சில்தான் வரி நிர்ணயம் செய்கிறது. ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவருவதை ஏற்பார்களா?

    50 வருடமாக மக்களை ஏமாற்றியே ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த ‘பந்த்’ நாடகமும்.

    எங்கள் கொள்கை நாட்டில் தூய்மையான, நேர்மையான நிர்வாகம் வேண்டும். கடனில் சிக்கி கிடக்கும் நிறுவனங்களை மீட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வைக்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

    உண்மை நிலையை உணர்ந்து எதிர்க் கட்சிகளின் ‘பந்த்’ நாடகத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

    Next Story
    ×