search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவராவ்
    X
    மாதவராவ்

    குட்கா ஊழலில் கைதான மாதவராவ் அப்ரூவராக மாறினார் - போலீஸ் அதிகாரிகள் கைது ஆகிறார்கள்

    குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான மாதவராவ் அப்ரூவராக மாறி இருப்பதால் மேலும் பல போலீஸ் அதிகாரிகள் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. #GutkaScam
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா வியாபாரிகள் தங்கு தடையின்றி அதனை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சோதனையின் போது சிக்கிய டைரி ஒன்றே, குட்கா ஊழலை முழுவதுமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ளது என்கிற விவரமும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போது சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயரும் டைரியில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, போலீஸ், அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னரும் குட்கா வழக்கு எந்த அசைவும் இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அதிரடி ஆபரே‌ஷனை தொடங்கினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையுடன் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட்கா அதிபர் மாதவராவிடம் திரட்டப்பட்ட தகவல்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

    குட்கா விற்பனைக்காக ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, கலால் துறை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றியும் மாதவராவ் புட்டு, புட்டு வைத்தார். இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளும் சிக்கினர்.

    மத்திய கலால் துறை அதிகாரியான கே.என்.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குட்கா வழக்கில் மாதவராவே முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரே, யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இதனை ஒப்புக் கொண்டுள்ள அவர் அப்ரூவராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல திருப்பங்கள் ஏற்பட உள்ளன. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கைது நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மீதும் பாய்கிறது.

    குட்கா முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட கால கட்டத்தில் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னன் மன்னன் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், இன்ஸ்பெக்டர் சம்பத் தூத்துக்குடியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ‘‘விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயரும் சிக்கி இருப்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் கமி‌ஷனர் ஜார்ஜ் ஓய்வு பெற்றுவிட்டார்.

    அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் ஜார்ஜ் மீதான பிடி இறுகி உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.



    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடமும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதே சி.பி.ஐ. அதிகாரிகள் முழு அளவிலான விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதனால் சி.பி.ஐ.யின் அடுத்த குறி யார் மீது? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. நெருங்கி இருப்பது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkaScam


    Next Story
    ×