என் மலர்
செய்திகள்

காவலர் தேர்வு வயது வரம்பை கவர்னர் உயர்த்த வேண்டும்- ஓம்சக்தி சேகர் கடிதம்
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தற்போது நடைபெற உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் வயது வரம்பு தொடர்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கோரிக்கையினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
புதுவை அரசின் காவல் துறை 390 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து வர வேற்றுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கான வயது வரம்பு தற்போது 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பணி நியமன விதியில் 22 ஆக குறைத்து இருப்பது புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
புதுவையில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு அதை விட அரசு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. எனவே தற்போது நிலவி வரும் வேலை வாய்ப்பற்ற அசாதாரண சூழ்நிலையில், இந்த தேர்வுக்கான வயது உச்ச வரம்பினை மாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது.
எனவே புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலன் கருதி பணிநியமன விதியில் மாற்றம் செய்ய கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பரிதாபமான நிலையினையும் கருத்தில் கொண்டு தற்போது உள்ள பணிநியமன விதியை மாற்றி வயது உச்ச வரம்பினை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.






