search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி செடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரம்
    X

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி செடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரம்

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காய்கறி செடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தது. இதையொட்டி தங்களது விளைநிலங்களை தயார்படுத்தி கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மேரக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது மழை குறைந்து பயிர்களுக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால், களை பறித்து மழைநீர் செல்லும்படி தோட்டங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. மேலும் அவ்வப்போது மழை பெய்வதால் உரமிட்டு, செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கோத்தகிரி பகுதியில் போதியளவு மழை பெய்ததால், தரிசாக கிடந்த நிலத்தை உழுது காய்கறிகளை பயிரிட்டு உள்ளோம். அதிலும் தற்போது பீட்ரூட்டுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் எங்களது தோட்டத்தில் பீட்ரூட் பயிரிட்டுள்ளோம். நடவு செய்து 2 மாதங்களில் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகிவிடும். தற்போது பூச்சிகள் தாக்காமல் இருக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி லிட்டர் என்ற அளவில் டுபோண்ட் என்ற பூச்சி மருந்தை கலந்து செடிகளில் தெளித்து வருகிறோம். மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. எனவே இந்த முறை பீட்ரூட் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×