search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயருகிறது
    X

    மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயருகிறது

    சென்னை மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது. #BusFareHike #TNTransport

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 20-ந் தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வருமானம் வரவில்லை.

    கட்டண உயர்வுக்கு முன்பு சென்னை மாநகர பஸ்களில் சுமார் 60 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்தது.

    அதிகளவில் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மாநகர பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்கவரத்துக்கு மாறினர்.

    இதையடுத்து மாநகர பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் வேலைக்கு செல்வோர் மாநகர பஸ்களில் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். இதே போல் ஒரு வழித்தடத்தில் செல்லும் மாதாந்திர பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

     


    ஏற்கனவே பயணிகள் வருகை குறைவால் வருவாய் குறைந்த நிலையில் அதிக அளவில் மாதாந்திர பாசில் ஏராளமானோர் பயணம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது 21.5 லட்சம் பேர் மாதாந்திர பாசில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தினமும் வசூலாகும் வருவாயில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது.

    இதன் மூலம் 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் விலை உயர்த்தப்படுகிறது. எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து போக்கு வரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு பயணிகள் பலர் மாதாந்திர பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர். இதில் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் 1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாசை பயன்படுத்தி இருந்தனர்.

    இதனால் தினமும் வசூலாகும் தொகை குறைவதாக கண்டக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு பஸ்சில் 20 பயணிகள் இருந்தால் அதில் பாதி பேர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர்” என்றார்.

    Next Story
    ×