search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க ஆய்வு - கலெக்டர் தகவல்
    X

    ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க ஆய்வு - கலெக்டர் தகவல்

    ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, வேளாண்மை இணை இயக்குனர் புருஷோத்தமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில் அளித்து பேசியதாவது:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான அளவு மழை பெய்யவில்லை என்றாலும், போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. அப்போது 4 கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதில் 41 குளங்களுக்கு தண்ணீர் வந்து உள்ளது. 12 குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. சடையநேரி கால்வாயிலும் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய் கொள்ளளவை அதிகரிப்பது, ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும்.

    சடையநேரி கால்வாய் தாமிரபரணி ஆற்றில் இருந்து செல்லும் பிரதான கால்வாய் கிடையாது. உபரிநீர் கால்வாய் ஆகும். 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த சடையநேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது 6 குளங்கள் 50 சதவீதம் நிரம்பி உள்ளது. இந்த கால்வாயில் படுக்கப்பத்து, புத்தன்தருவை பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகளே தூர்வாரி உள்ளனர். மீதம் உள்ள கால்வாய் விரைவில் தூர்வாரப்படும். முக்காணி தடுப்பணை 70 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதியில் ரூ.52 கோடி செலவில் ரெகுலேட்டர் தடுப்பணை அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நிரம்பாத குளங்களும் விரைவில் நிரம்பும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்த அமலைச் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. கால்வாய்களில் அடைத்து இருந்த அமலைச் செடிகள் அகற்றப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த நோட்டீசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.

    Next Story
    ×