search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலிமனைகளில் தேங்கி உள்ள குப்பை கழிவு நீரை அகற்ற 15 நாள் கெடு- உள்ளாட்சிதுறை எச்சரிக்கை
    X

    காலிமனைகளில் தேங்கி உள்ள குப்பை கழிவு நீரை அகற்ற 15 நாள் கெடு- உள்ளாட்சிதுறை எச்சரிக்கை

    டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க காலிமனைகளில் தேங்கி உள்ள குப்பை கழிவுநீரை அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சிதுறை ஆணை பிறப்பித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது சம்பந்தமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நகராட்சிகள் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து டெங்கு பரப்பக்கூடிய கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    கடந்த ஆண்டு டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களை முதன்மையாக எடுத்து கொண்டு கொசு உற்பத்தியை தடுக்க நகராட்சிகள் பலவித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் குப்பைகள் அதிகம் சேரும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி வாயக்கால்களை சுத்தம் செய்து கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பராமரிப்பின்றி இருக்கும் காலிமனைகளில் புதர்கள் மண்டியும், குப்பை மற்றும் தண்ணீர் தேங்கியும் உள்ளதால் கொசு உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

    எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை நகராட்சிகள் சட்டத்தின்படி புதுவை மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் மழை கழிவுநீர் முதலியவற்றை 15 நாட்களுக்குள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும்படி காலிமனையின் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்ககூடிய செயல் என்பதால் இது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்ககூடிய குற்றமாகும்.

    எனவே மேற்குறிப்பிட்டுள்ள ஆணைப்படி காலிமனை உரிமையாளர்கள் தங்களது காலிமனையை சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் சுகதாரத்தோடும் வாழவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பொதுமக்களும் தாமாக முன்வந்து தங்கள் விட்டை சுற்றியுள்ள இடங்களில் நீர்தேங்கும் ஆதாரங்களை நீக்கி நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அந்த வகையில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×