search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.
    X
    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காட்சி.

    காவிரியில் 4 லட்சம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு- 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

    காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து, மொத்தம் 4 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். #CauveryRiver
    திருச்சி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை 8 நாட்களாக நிரம்பிய நிலையில் உள்ளது. தற்போது வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த தண்ணீர் பவானி, ஈரோடு கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை அடைகிறது. அங்கிருந்து முக்கொம்பு அணை செல்கிறது.

    முக்கொம்பு அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக கல்லணைக்கும், உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கும் திறந்து விடப்படுகிறது.

    காவிரியில் பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் அமராவதி ஆற்று தண்ணீரும் இணைவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாயனூர் கதவணைக்கு இன்று காலை 2.30 லட்சம் கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் 83 மதகுகள் வழியாக அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும் 4 கிளை வாய்க்கால்களில் 1610 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    முக்கொம்பு அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 2.34 லட்சம் கன தண்ணீர் வருகிறது. இங்கிருந்து காவிரி ஆற்றில் கல்லணைக்கு 67,000 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 1.67 லட்சம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி-கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. கிளைவாய்க்கால்களில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரியில் 9,001 கன அடியும், வெண்ணாற்றில் 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,004 கனஅடியும், கொள்ளிடத்தில் 50,655 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மழை நீடிப்பதால் நீர்வரத்து அதிகரித்து இன்னும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இன்று காவிரி ஆற்றில் 4 லட்சம் கனஅடி நீர் வரை செல்லக்கூடும் வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார்.

    மேலும் கரையோரத்தில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதிகளை கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 24 மணிநேரமும் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கரூர் மாவட்டத்தில் கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம், திருமுக்கூடலூர், கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர், மாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோரை, வாழை, தென்னந்தோப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளம் வடியாமல் வயல்களிலேயே தேங்கியுள்ளது.

    கரூர் மாவட்டம் என். புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட தவுட்டுப்பாளயம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கரையோரம் உள்ள இந்த கிராமத்தில் தண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உடமைகளுடன் வெளியேறினர். அவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, சேவை மையங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

    கரூர் அமராவதி ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்வதால் கரையோரம் அமைந்துள்ள திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, என்.புதுப்பாளையம், அச்சமாபுரம், சோமூர் ஆகிய கிராமங்களில் நெல், சோளம், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    கட்டளை காவிரி ஆற்றின் கரைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகள் வழியாக நீர்க் கசிவு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் வெள்ள பாயும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மணல் மூட்டைகளை கொண்டு நீர்க்கசிவு பகுதிகள் சரி செய்யப்பட்டன.

    கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அரியலூர் மாவட்டம் தா.பழுர், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

    விக்கிரமங்கலம் அருகே உள்ள அணைக்குடி, முட்டு வாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வருவாய்த்துறையினரும், தீயணைப்பு படை வீரர்களும் வந்து மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை சரி செய்தனர். அணைக்குடி கிராமத்தில் வசிப்பவர்கள் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைபள்ளியில் தங்க வைக்கப்பட்டு, உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. திருமானூர் அருகே வைப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட கரை உடைப்பால் 800-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்சி உத்தமர்சீலி தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.


    திருச்சி உத்தமர்சீலி தரை மட்ட பாலத்தில் தண்ணீர் வழிந்தோடுகிறது. அப்பகுதியில் 100 ஏக்கர் வாழை தோட்டத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியை அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி. மற்றும் கலெக்டர் ராசாமணி, அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில் 18-வது தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அப்பகுதி பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பாலத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்த பிறகு பாலம் முற்றிலும் அகற்றப்படும் என்றார்.

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம், கூகூர், அன்பில், செங்கரையூர், டி.கள்ளிக்குடி, கே.வி.பேட்டை, ஆலங்குடி, நத்தம், நத்தமாங்குடி, திண்ணிம் ஆகிய கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களின் வழியாக காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இங்கு கொள்ளிடம் கூழையாறு வழியாக பாய்ந்த வெள்ளநீர் வயல் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த கதிர் வந்த நிலையில் காணப்பட்ட நெல் மற்றும் வாழை பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின. மேலும் கே.வி. பேட்டை, மகாஜனம், நத்தம் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்த மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அங்கு கரையோர பகுதி வயலில் நிறுத்தப்பட்டிருந்த கதிர் அடிக்கும் எந்திரம் ஒன்றை மீட்பதற்காக விவசாயிகளான லட்சுமணன் (வயது 36), முத்திராபதி (33) ஆகிய 2 பேர் சென்றனர். அப்போது வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். உடனடியாக சுதாரித்து கொண்ட அவர்கள், வேகமாக கரைக்கு திரும்பியதால் உயிர் தப்பினர்.

    இதேபோல் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் குள்ளன் (60) என்பவர் முயல் பிடிக்க சென்றிருந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கி கொண்ட அவர், அருகில் இருந்த மரத்தை இறுக பிடித்துக்கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    திருச்சிமாவட்டம் முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது. இதனை காண பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் அழகை ரசித்து பார்த்து செல்கின்றனர். காவிரி ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், ஆறு அருகே செல்லாமல் இருக்கவும் வருவாய்த்துறையினர் தடுப்புகள் வைத்துள்ளனர்.

    ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதி கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலைய பாலம் சேதம் அடைந்துள்ளதை பாடத்தில் காணலாம்.


    ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதி கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பஞ்சக்கரையில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு செல்லும் பாலத்தின் முதல் தூண் 3 அடி மண்ணில் புதைந்தது. இதனால் நீரேற்று நிலைய மோட்டாரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர், கூத்தப்பார், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 80 ஊரக குடியிருப்புகள் மற்றும் 18 இதர அமைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைந்த பின்பு தான் இவை சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி பகுதியில் காவிரி தண்ணீர் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 மதகுகள் உள்ளது. அந்த மதகுகள் நாளடைவில் பராமரிப்பின்றி இருந்தன. காவிரியில் அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால் மதகுகள் வழியாக வெள்ளநீர் வெளியேறின.

    வெள்ளநீர் வெளியேறியதால் கரையோரத்தில் இருந்த 2 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த 11 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளநீர் வெளியேறும் மதகுகளில் 3 இரும்பு பிளேட்டுகளை கொண்டு அடைக்கப்பட்டது.

    கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். அவர்கள் ஆங்காங்கே பள்ளிகள், சமுதாய கூடங்கள், சேவை மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கொள்ளிடம் ஆற்றில் 4 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் காவிரி மற்றும் கொள்ளிடக்கரையோர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாற்றில் கொள்ளிடம் ஆற்று நீர் கடலில் சென்று கலக்கிறது. சீர்காழி அருகே உள்ள வெள்ள மணல், முதலை மேடு, நாதல்படுகை, வாடி ஆகிய 5 கிராமங்களை கொள்ளிடம் ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதியில் உள்ள 1000 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மீட்டு 8 முகாம்களில் தங்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளிடம் அருகே மேலவாடி என்ற இடத்தில் 30 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். #CauveryRiver
    Next Story
    ×