search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி உடல்நிலை - காவேரி தகவலுக்காக காத்துக்கிடக்கும் தொண்டர்கள்
    X

    கருணாநிதி உடல்நிலை - காவேரி தகவலுக்காக காத்துக்கிடக்கும் தொண்டர்கள்

    கருணாநிதி உடல்நிலை குறித்து ‘காவேரி’ மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்படும் தகவலுக்காக தொண்டர்கள் தூக்கத்தை தொலைத்தும் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    விதியே இது என்ன சோதனை....?

    ஓய்வறியாத சூரியனை ஒற்றை அறைக்குள் முடக்கினாய். வயது மூப்புதான். ஆனாலும் எங்களை விட்டு அவர் பிரிவதை மனம் ஒப்பவில்லையே!

    எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திய கருணாநிதியின் உடல் நிலையிலும் அதிசயிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

    மீண்டு வருகிறார் கலைஞர் என்ற சேதி கேட்டு தொண்டர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. விழி திறந்தார் என்றதும் தொண்டர்கள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!

    வருவார் நம் தலைவர். மீண்டும் அவரது காந்தக் குரலை கேட்கும் காலம் வரும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

    தேறி வருகிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு ‘கருணாநிதி கவலைக்கிடம்’ என்று வந்த தகவல் இடியாய் தாக்கியது.



    மீண்டும் காவேரி நோக்கி ஓடி வந்தார்கள். ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் திரண்டு விட்டனர்.

    இருண்டுபோன நேரம் அவர்களுக்கு தெரியவில்லை. ‘அரசியலில் எவ்வளவோ ‘கெடு’ விதித்த கலைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் ‘கெடு’ என்றதும் தொண்டர்கள் மனம் நொறுங்கி போனார்கள்.

    விடிய விடிய ஆஸ்பத்திரி வாசல். போக்குவரத்து மாற்றப்பட்டதால் சாலைகளில் அமர்ந்தும், படுத்தும் நேரத்தை போக்கி கொண்டிருக்கிறார்கள்.

    தூக்கத்தை தொலைத்த கண்கள். பசியால் உடல் சோர்ந்தாலும் இடைவிடாமல் ‘வா.... வா.... தலைவா....’ என்று உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள்.

    வயது மூப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனால் எங்கள் ஆசைக்காக எங்கள் தலைவரை இன்னும் கொஞ்ச நாள் எங்களிடம் விட்டு வை என்று தொண்டர்கள் ஏங்குகிறார்கள்.

    குடும்பத்தோடு வந்தவர்கள்... வீட்டில் கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெண்கள்.... மனைவி, குழந்தைகளை வீட்டில் இருக்க சொல்லி விட்டு வந்த ஆண்கள், வேலைகளை விட்டு விட்டு ஓடோடி வந்த இளைஞர்கள், இளம்பெண்கள்.....



    காவேரி வாசலில் திரண்டிருக்கும் கூட்டம் வடிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலைஞர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது இதுதான்!

    ஆண்டவனே உன்பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க உன்னிடம் கையேந்தினேன்.. மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

    இன்று மாலைதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை கூறி விட்டது.

    ‘கலைஞர் எப்படி இருக்கிறார்?’ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டார்களா? சென்று வருவோர், போவோரை ஓடி ஓடி சென்று கேட்கிறார்கள்.

    கோவையைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஜெனிபர். போரூரில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். கலைஞர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும் அவரது தந்தை சென்னை விரைந்துள்ளார். தந்தையும், மகளுமாக இன்று அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர். ஜெனிபர் கூறியதாவது:-

    கலைஞர் எனக்கு தாத்தா மாதிரி. அவரால்தான் நான் படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அவர் உடல்நிலை கவலைக்கிடம் என்றதும் தாங்க முடியவில்லை.

    அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. ரொம்ப சங்கடமாக இருக் கிறது. அவரது நிலையை அறியாமல் இங்கிருந்து போக மனமில்லை.

    அனிதா (கொளத்தூர்): நேற்று மாலையில் கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக வந்து விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    டாக்டர்கள் 24 மணி நேரம் கெடு சொல்லி இருக்கிறார்கள். கடவுளை நம்பி இருக்கிறோம். அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை உள்ளது.

    வரலெட்சுமி (கொளத்தூர்):- எனக்கு உடம்புக்கு சரியில்லை. வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தேன். கலைஞர் கவலைக்கிடம் என்றதும் புறப்பட்டு வந்தேன்.

    பத்து நாளாக ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவருக்கு வயசு மூப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தலைவருக்கு அப்படி எதுவும் வராது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கை அசைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்.

    கோமளவள்ளி (திருவொற்றியூர்):- கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு வில்பவர் அதிகம். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “100 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கு முன்பு எனது உயிர் போனாலும் தமிழுக்காக உயிர் போகும்” என்றார். அவர் போராட்டக்குணம் கொண்டவர். மரண போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார்.

    அம்மு (ஆயிரம்விளக்கு):- என் குடும்பமே தி.மு.க. குடும்பம். கருணாநிதி உடல்நிலை பற்றி கேள்விபட்டதும் எங்களால் சாப்பிட முடியவில்லை. அவர் உடல்நலத்துடன் இருந்தாலே போதும். அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்விபட்டதும் தூக்கம் வரவில்லை. குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இன்று அதிகாலையிலே வந்து விட்டோம்.

    ரூபன் (சேலம்):- நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்து கேள்விபட்டதும் ரெயில் ஏறி சென்னை வந்து விட்டேன். கருணாநிதி மக்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும்படி செய்தவர். அவரால் நிறைய பேரின் சமூக அந்தஸ்து உயர்ந்துள்ளது. அவரை எப்படியாவது பார்க்கவே வந்தேன். அவர் நலமுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கல்லை பெரியசாமி (பெரம்பலூர்):- கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்ததும் தூங்க முடியவில்லை. தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கலைஞர். அவருக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அவரிடம் எந்த மனு கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அவர் எப்போது அறிவாலயம் வருவார், உடன்பிறப்பே என்று எப்போது அழைப்பார் என்று காத்து கொண்டிருக்கிறேன். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital

    Next Story
    ×