search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு- கோவில் நிர்வாக அலுவலகம் முற்றுகை
    X

    ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு- கோவில் நிர்வாக அலுவலகம் முற்றுகை

    திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் அகற்றியதற்கு அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    பூந்தமல்லி:

    புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

    இந்த கோவில் அருகே உள்ள சன்னதிதெரு, கோவில் எதிரே மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்காய், பழம், பூ மாலை விற்கும் கடைகள், ஓட்டல், விடுதிகள் உள்பட 300-க்கும் அதிமான கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றன. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது பக்தர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கருமாரி அம்மன் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அந்த கடைகள் அகற்றப்பட்டன.

    முன் அறிவிப்பு இல்லாமல் கடைகள் அகற்றப்பட்டதாக கூறி, இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திடீரென்று கருமாரி அம்மன் கோவில் கதவை இழுத்து பூட்டினார்கள்.

    இதனால், கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அப்புறப்படுத்தி விட்டு கோவில் கதவை திறந்தனர்.

    பின்னர் வியாபாரிகள் கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவில் நிர்வாகத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். கடைகள் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். #tamilnews
    Next Story
    ×