search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு - மஞ்சள் மூட்டைகள் தேக்கம்
    X

    லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு - மஞ்சள் மூட்டைகள் தேக்கம்

    லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடித்து வருவதால் இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் மஞ்சள் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. #LorryStrike #vegetables

    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சேலத்தில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு தொழிற்சாலைகளும், பெரிய தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் இயங்கி வருகின்றன. வேலை நிறுத்த போராட்டத்தால் பொட்டனேரியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் இரும்பு தளவாட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி கிடக்கின்றது.

    இதுபோல் ரசாயண தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்ற பொருட்கள் சந்தைப் படுத்த முடியவில்லை. மேட்டூர் தொழிற்பேட்டையில் நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மெக்னீசியம் சல்பேட் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்களை லாரிகளில் கொண்டு வரமுடியாத காரணத்தினால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் வட்டாரத்தில் மட்டும் ஒரு வார காலத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் எரியூட்டப்படும் நிலக்கிரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 3000 டன் நிலக்கரி சாம்பல் வெளியேறுகிறது. லாரிகள் மூலம் இந்த சாம்பல் செங்கல் உற்பத்திக்கும், சிமெண்ட் உற்பத்திக்கும் எடுத்துச் செல்லப்படும். இந்த சாம்பலும் தொழிற்சாலை வளாகத்தில் அப்படியே தேங்கி கிடக்கிறது.

    சேலம் சத்திரம், பள்ளப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மஞ்சள் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் மஞ்சள் சுத்தம் செய்து, தரம் பிரித்து மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்கு லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தற்போது ஸ்டிரைக்கால் மண்டிகளில் மஞ்சள் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கின்றன. ரூ.25 கோடி மதிப்பிலான மஞ்சள்கள் தேக்கம் அடைந்துள்ளது. சேலம், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி, அரிசி, பருப்பு உள்ளிட்ட ஆலைகளில் பொருட்கள் தேங்கி உள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் தொழிலாளகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 8-நாட்களாக வேலை இல்லாத காரணத்தினால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    போராட்டம் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. நேற்று மாநில தலைவர் துறைமுகத்தில் நடைபெற்ற கண்டெய்னர் லாரிகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். தீப்பெட்டி தொழிற்சாலைகள் எல்லாம் மூடி விட்டார்கள். துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். 95 சதவீதம் லாரிகள் இயங்கவில்லை.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள். இதுவரை மத்திய அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை. விலைவாசி 10-ல் இருந்து 20 சதவீதமாக உயர ஆரம்பித்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike #vegetables

    Next Story
    ×