search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கப்படுகிறது
    X

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கப்படுகிறது

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. #MBBSAdmission #Supremecourt

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை முதல் வாரம் நடைபெற்றது.

    இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின. அதனை தொடர்ந்து தனியார், மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கியதோடு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் இந்த வழக்கை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

    இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:-

     


    ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் தமிழக அரசிடம் ஆலோசனை பெற்று, சட்ட ஆலோசனைகளும் பெற்ற பின்னனர் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். திங்கட்கிழமை கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.

    அகில இந்திய அளவிலான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும். முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சேராதவர்கள் மூலம் ஏற்படும் காலி இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வையும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான முதல் கட்ட கலந்தாய்வையும் ஒரே நேரத்தில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார். #MBBSAdmission #Supremecourt

    Next Story
    ×