என் மலர்
செய்திகள்

காமராஜர் அணையில் குவாரி அமைத்து மணல் கொள்ளை
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கப்பகுதி மற்றும் குடகனாற்று கரை பகுதியிலும், சீவல்சரகு ஊராட்சிப் பகுதியில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள குடகனாற்று பாலம் பகுதியிலும் வீரக்கல் ஊராட்சி பகுதியிலும் மணல் திருட்டு ஜோராக நடைபெறுகிறது.
தற்போது பட்டப்பகலில் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்திற்கு நீர் வரும் பாதையை உடைத்து கட்டிடப்பணிகளுக்காகவும், சாலைப் பணிகளுக்காகவும் மணல் திருட்டு படுஜோராக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் கொண்டு அணைக்கட்டில் குழிபறித்து மணலை எடுத்து, அதை சலித்து திருச்சி மணல் என கூறி விற்பனை செய்து வருகின்றனர்.
பலமுறை ஆத்தூர் வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் புகார் செய்தும், மணல் மற்றும் மண் திருட்டை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் செய்கின்றனர். அணைக் கட்டுக்குள் மணலை திருடி குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். இரவு நேரங்களில் டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.
இதனால், காமராசர் நீர்த்தேக்கத்தில் நிலத்தடி நீர்மட்டமும், விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ஆத்தூர் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலரை மாற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.






