என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டைப்பட்டினம் தொழிலதிபர் கடத்தல்: 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    X

    கோட்டைப்பட்டினம் தொழிலதிபர் கடத்தல்: 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

    பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையால் கோட்டைப்பட்டினம் தொழிலதிபரை கடத்திய கும்பலை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவைச் சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்கிற ஜமால் முகமது (வயது 50). இவர் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் இரால், மீன் போன்றவற்றை வாங்கி, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    தினமும் அதிகாலை பள்ளி வாசலுக்கு சென்று தொழுகை நடத்தும் பழக்கம் உள்ள ஜமால்முகமது வழக்கம்போல நேற்று காலை 4.45 மணிக்கு கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காக தனது மகன் முகமது யாசர் என்பவருடன் நடந்து சென்றார். அவர் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்றபோது, அங்கு நின்றிருந்த காரில் இருந்து திடீரென்று இறங்கிய 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஜமால்முகமதுவை காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    தன் கண் முன்னே கத்தி முனையில் தந்தை கடத்தப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யாசர்அராபத், அது குறித்து கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் கண்கானிப்பாளர் இளங்கோவன், அறந்தாங்கி டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி டி.எஸ்.பி. அப்துல் முத்தலிப் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தொழிலதிபர் ஜமால் முகமதுவை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலை 9 மணியளவில் வடகாடு காவல் சரகம் கருக்காக்குறிச்சி பகுதியில், போலீசார் சோதனை நடத்தியபோது, ஜமால் முகமதுவை கடத்தி வந்தவர்கள் தாங்கள் வந்த கார்களை நிறுத்தி விட்டு கரும்பு காட்டுக்குள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்ததுடன் தொழிலதிபர் ஜமால்முகமதுவை மீட்டனர்.

    மேலும் அவரை கடத்தியதாக ஜெகதாபட்டினம் கோடகுடி முத்துக்குமார் (39), மதுரை கூடல்நகர் கோபி (23) கருக்காகுறிச்சியைச் சேர்ந்த முத்துவேல் (40), மணி வாசகம் (34), மதுரை இளமனூர் ஹரிகரன் (19), மனக்காடு அய்யப்பன் (51) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தப்பட்ட ஜமால் முகமதுவும், முத்துக்குமாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடல் தொழிலை பார்ட்டனராக செய்து வந்தனர்.இந்த நிலையில் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஒரு தியேட்டரை இருவரும் பார்ட்டனராக வாங்கியுள்ளனர். தியேட்டரை வாங்கும் போது, முத்துக்குமார் அதை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார்.

    ஆனால் இந்த இடத்தின் மூலப்பத்திரம் ஜமால் முகமதுவிடம் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த இடம் வாங்கியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் கடல் தொழிலை தனித்தனியாக செய்யத் தொடங்கினர்

    இந்த நிலையில் முத்துக்குமார் ஜெகதாபட்டினம் தியேட்டர் உள்ள இடத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக ஜமால்முகமதுவிடம், மூலப்பத்திரத்தை கேட்டுள்ளார். அதற்கு ஜமால்முகமது மறுத்துள்ளார். மேலும் அந்த இடத்தை இருவரும் சேர்ந்து தான் வாங்கினோம், விற்கும் பணத்தை பாதியை தந்தால், மூலப்பத்திரம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் ஜமால் முகமதுவிடம் உள்ள மூலப்பத்திரத்தை பெறுவதற்காக அவரது முன்னாள் பார்ட்னர் முத்துக்குமார், கூலிப்படையினரை வைத்து ஜமால் முகமதுவை கடத்தியது தெரியவந்துள்ளது.

    தொழிலதிபர் ஜமால்முகமது கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் அவரை பத்திரமாக மீட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். #tamilnews
    Next Story
    ×