search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் - தமிழக அரசு முடிவு
    X

    மாநிலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் - தமிழக அரசு முடிவு

    இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவே (யு.ஜி.சி.) தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    யு.ஜி.சி. என்ற பல்கலைக்கழக மானியக் குழு மூலம் மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகிறது. யு.ஜி.சி.க்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கான காலஅவகாசத்தை ஜூலை 20-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலை, அறிவியல் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த நிலையில், இந்த வரைவு சட்டமசோதாவைப் பற்றியும், அதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    இந்த வரைவு சட்டத்தை ஏற்கக்கூடாது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

    கடந்த 1956-ம் ஆண்டு முதல் யு.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு தேவையற்றது.

    கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த அமைப்பு கவனிக்கும் என்பதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    யு.ஜி.சி.தான் தொடரவேண்டும் என்பது தமிழக அரசின் கருத்து. இந்தக் கருத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனே அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×