search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

    தருமபுரி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளப்பட்டி, நத்தஅள்ளி, கோனப்பள்ளம், பழைய இண்டூர் உள்பட சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தயானந்த் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்.

    தயானந்த் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் செந்தில் குமார், கோபால கிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சரியாக பாடம் நடத்துவது இல்லை என்றும், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி திட்டுவதாகவும், மாணவர்களை தடியால் கடுமையாக தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாதத்திற்கு ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்துவது கிடையாது. இதனால் இன்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி முன்பு குவிந்தனர்.

    இண்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்கள் மீதான புகார்களுக்கு வருகிற திங்கட்கிழமையன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடத்தபடும் என்றும், அங்கு தங்களது புகார்களை தெரிவித்தால், புகாரின்பேரில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி வகுப்பறைக்குள் சென்றனர். #tamilnews
    Next Story
    ×