search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனி மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி
    X

    இனி மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் கந்தசாமி உறுதி

    இந்த மாதம் முதல் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சட்டசபையில் அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அன்பழகன்:- புதுவை மாநிலத்தில் ஆட்சி அமைந்தது முதல் எத்தனை மாதம் இலவச அரிசி வழங்கப்பட்டது? எத்தனை மாதம் வழங்கப்படவில்லை? அரிசி வழங்காத மாதத்தில் வங்கி மூலம் மக்களுக்கு அரிசிக்கான தொகை வழங்கும் திட்டம் உள்ளதா?

    அமைச்சர் கந்தசாமி:- எங்கள் ஆட்சி அமைந்தது முதல் கடந்த ஏப்ரல் வரை 12 மாதத்திற்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. 12 மாதத்திற்கு வழங்கவில்லை. இலவச அரிசிக்காக மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியே 88 லட்சம் செலவாகிறது.

    அன்பழகன்:- பட்ஜெட்டில் இலவச அரிசிக்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறீர்கள். அதற்கு பிறகு ஏன் இலவச அரிசி வழங்க முடியாமல் போகிறது?

    கந்தசாமி:- ஏழைகளுக்கு மட்டும்தான் இலவச அரிசி வழங்க வேண்டும் என கவர்னர் கூறுகிறார். இதனால் அனுப்பும் கோப்பு சென்று திரும்புகிறது. இதனால்தான் அரிசி வழங்க முடியாமல் போகிறது. இந்த மாதம் முதல் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அன்பழகன்:- இலவச அரிசிக்காக ரூ.216 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளீர்கள். அரிசி போட முடியாவிட்டால் வங்கியில் பணமாக போடலாமே?

    கந்தசாமி:- பணமாக கொடுத்துவிட்டால் சாராயகடை, மது கடைகளுக்குத்தான் போகும். அதனால்தான் பணமாக கொடுப்பதை தவிர்க்கிறோம்.

    பாலன்:- கோப்புகளை ஏன் கவர்னருக்கு அனுப்புகிறீர்கள்? உச்சநீதிமன்றமே கோப்புகளை அனுப்ப வேண்டாம் என சொல்லி விட்டதே?

    அனந்தராமன்:- கோப்புகளை கவர்னருக்கு அனுப்ப தேவை கிடையாது. நீங்களே முடிவெடுங்கள்.

    பாலன்:- கவர்னருக்கு கோப்புகளை திருப்பி அனுப்பும் அதிகாரம் கிடையாது. நிலை உத்தரவு மட்டும்தான் பிறப்பிக்க முடியும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய உள்துறைக்கு அனுப்புங்கள்.

    கந்தசாமி:- நடைமுறையில் உள்ள சிக்கலைத் தான் தெரிவிக்கிறோம். இந்த மாதம் முதல் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பாலன், சிகப்பு ரே‌ஷன் கார்டுகளை மஞ்சள் கார்டாக மாற்றியுள்ளனர். அவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில்லை. கார்டுகளை மாற்ற எந்த அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி, ரே‌ஷன்கடை ஊழியர்கள் மூலமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தோம். அந்த ஆய்வின் அடிப்படையில் சிகப்பு ரே‌ஷன் கார்டை மஞ்சள் கார்டாக மாற்றியுள்ளனர். புகார்கள் வந்ததால் கார்டுகளை மாற்றும் பணியை நிறுத்திவிட்டோம். மாற்றப்பட்ட மஞ்சள் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×