search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டம் - நாராயணசாமி உறுதி
    X

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டம் - நாராயணசாமி உறுதி

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறுவதற்கு உரிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் பேசியதாவது:-

    சென்டாக் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் பெற்றோர்கள் கடன் வாங்கி கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டாவது சென்டாக் கல்வி நிதியை காலத்தோடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

    நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் மட்டுமே சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். 300 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்ற தகுதியுள்ள பல மாணவர்கள் புதுவை பிராந்தியத்தில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போவதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உரிய இடம் பெற்று ஆண்டுதோறும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்தோம். ஆனால் இந்த அரசு 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ஒரு இடத்தைக்கூட அரசு ஒதுக்கீடாக பெறவில்லை.

    3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் 50 சதவீத இடங்களை 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் இருந்து பெற அரசாணை வெளியிட வேண்டும். இதன்மூலம் மாநில மாணவர்கள் கூடுதலாக மருத்துவ இடங்களை பெற்று பயனடைவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

    நிகர்நிலை பல்கலைக் கழகங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. அரசாணை வெளியிடுவது தொடர்பாக ஏற்கனவே நீங்கள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளீர்கள். இதுதொடர்பாக சென்டாக் அதிகாரிகளிடம் நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினோம். அரசாணை வெளியிடுவதால் இதை தடுக்க முடியாது. இதற்கென சட்டம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தமிழகம், கர்நாடகாவில் சட்டம் கொண்டுவந்துள்ளனர். அதேபோல புதுவையிலும் சட்டம் கொண்டுவர சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×