search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானியத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி - விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    X

    மானியத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி - விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், குறைந்த நீரில் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டக் கூடிய காய்கறிகள், பழப் பயிர்கள், மலர் பயிர்கள் மற்றும் மலை தோட்டப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதோடு உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் திட்ட விரிவாக்க அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடு பொருட்கள் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மல்லிகை மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. சம்பங்கி போன்ற கிழங்கு வகை மலர்களுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், நடவு செடிகளின் விவரங்கள் மற்றும் அனைத்து திட்ட விவரங்கள் “உழவன் செயலி’’ மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படும் விவரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×