search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபர் ராஜனுக்கு சொந்தமான கட்டிடம் சீல் வைக்கப்பட்டிருக்கும் காட்சி.
    X
    தொழில் அதிபர் ராஜனுக்கு சொந்தமான கட்டிடம் சீல் வைக்கப்பட்டிருக்கும் காட்சி.

    ப.சிதம்பரம் உறவினர் என கூறி ரூ.15 கோடி மோசடி செய்த தொழில் அதிபர் தலைமறைவு

    ப.சிதம்பரத்தின் உறவினர் என கூறி ரூ.15 கோடி மோசடி செய்த தொழிலதிபர் தலைமறைவாகிவிட அவரது வீடு, அலுவலகத்துக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.
    ஊட்டி:

    ப.சிதம்பரத்தின் உறவினர் என கூறி ரூ.15 கோடி மோசடி செய்த தொழிலதிபர் தலைமறைவாகிவிட அவரது வீடு, அலுவலகத்துக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வால்சம் சாலையில் ‘பாங்க் ஆப் இந்தியா’ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேனேஜராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2012- 2015-ம் ஆண்டு வரை ஊட்டியைச் சேர்ந்த ராஜன் (வயது55), என்பவருக்கு சொந்தமான குரோவின் புளோரிடெக் என்ற நிறுவனத்துக்கு மலர் சாகுபடி செய்ய கடன் வழங்கினார்.

    ராஜன் சிறு விவசாயிகளுக்கு கடன் வாங்கி தரும் ஏஜெண்டாகவும் இருந்துள்ளார். விவசாயிகளின் ஆவணங்களை காட்டி வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது வங்கி உயர்அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

    இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் 15 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 58 விவசாயிகள் மலர் சாகுபடி செய்ய இந்த கடனை பெற்றதாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. மலர் சாகுபடி மேற்கொள்ள தேவையான பசுமை குடில், சொட்டு நீர் பாசன கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கும், நிலத்தை குத்தகை எடுப்பதற்கும், இந்த கடன் வழங்கப்பட்டது என்ற, பொய்யான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    வங்கியில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள முகவரியில், மலர் சாகுபடிக்கான பசுமைக் குடில் அமைக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வங்கி மேனேஜர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

    வங்கியில் பல்வேறு விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றுள்ள தொழில் அதிபர் ராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    நேற்று சி.பி.ஐ.அதிகாரிகள் ஊட்டிக்கு வந்தனர். அவர்கள் ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள ராஜனுக்கு சொந்தமான வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். பின் குன்னூரில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பிற கட்டிடங்களுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

    ராஜன் குன்னூர் டேன்ஸ் பள்ளி சாலையில் 4 கட்டிடங்கள் மற்றும் தனித்தனி குடியிருப்புக்கான அனுமதி பெற்று ‘மாஸ்டர் பிளான்’ சட்டத்தை மீறி ஒரே கட்டடமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது ‘நான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர்’ என பொய் கூறி மிரட்டியுள்ளார். இதனால், அதிகாரிகள் இந்த கட்டிடத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் தான் கட்டிடத்துக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் சில கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்த தகவலை மட்டும் ஊட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். மற்றப்படி எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது என்றார்.

    மோசடி செய்த தொழில் அதிபர் ராஜன் கோவை உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளில் பலகோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சீல் வைக்கப்பட்ட தகவலை அடுத்து ராஜன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ராஜன் வால்பாறையில் எஸ்டேட் மற்றும் தங்கும் விடுதிகள் வாங்கி குவித்துள்ளார்.

    அவர் வால்பாறை பகுதிகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து வால்பாறை வங்கிகளில் இவர் கடன் பெற்று மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×