search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பள்ளி மாணவனுக்கு எஸ்.பி. எச்சரிக்கை
    X

    முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பள்ளி மாணவனுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

    முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பெற்றோருடன் வரவழைத்து போலீஸ் எஸ்.பி. எச்சரித்து அனுப்பினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தான்.

    பிறகு அங்குள்ள ஒரு “காய்ன் போனில்” ஒரு ரூபாயை எடுத்து போலீஸ் கண்ட்ரோல் எண் 100-க்கு அடித்தான். மறுமுனையில் ஹலோ.. என்று சத்தம் கேட்டதும் மாணவன், “காசிபாளையம் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசியதை நான் கேட்டேன் அதற்காகத்தான் பேன் பண்ணினேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டு பதட்டம் அடைந்த போலீசார் காசிபாளையம் ஊருக்குள் புகுந்து பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென ஊருக்குள் இவ்வளவு போலீசார் புகுந்து என்ன தேடுகிறார்கள்? என பொதுமக்களும் பதட்டம் அடைந்தனர்.

    பல மணி நேர அதிரடி விசாரணைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் கூறியது புரளி என தெரிய வந்தது.

    பிறகு அதே பள்ளி மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அவனது தாயார் வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தனது தாயாரின் செல்போனை எடுத்து மீண்டும் 100-க்கு அடித்தான்.

    இந்த தடவை அந்த போன் கால் சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு சென்றது. போனில் பேசிய மாணவன். “முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்காங்க” என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டதும் பதட்டம் அடைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் சொன்னதும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அது புரளி என தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் போனில் பேசியது யார்? என்று செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த போன் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருந்து வந்தது என தெரிய வந்தது. உடனே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கோபி போலீசாருக்கும் அருகே உள்ள கடத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோபி மற்றும் கடத்தூர் பகுதி போலீசார் நடத்திய விசாரணையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பிடித்தனர்.

    பிறகு போலீசார் அந்த மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

    அந்த மாணவனிடம் எஸ்.பி, “எதற்காக இப்படி போனில் பேசினாய்?” என்று கேட்க விளையாட்டுக்காத்தான் இப்படி பேசினேன்.. என்று மிரண்டபடி.. பயந்து கொண்டே கூறினான்.

    “படிக்கும் வயசில் இப்படியெல்லாம் போனில் பேசினால் பெரிய விபரீதம் ஆகும் தெரியுமா.. இல்லையா? இப்படியெல்லாம் போனில் பேச கூடாது” என எஸ்.பி. எச்சரித்தார்.

    மேலும் அவனது பெற்றோருக்கும் எஸ்.பி.சக்தி கணேசன் எச்சரித்து அறிவுரை கூறினார்.

    படிக்கும் பையனிடம் செல்போன் கொடுத்தால் இப்படிதான் நடக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×