search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கண்டக்டர்கள் இல்லாமல் சுமால் பஸ்களை இயக்க முடிவு
    X

    சென்னையில் கண்டக்டர்கள் இல்லாமல் சுமால் பஸ்களை இயக்க முடிவு

    வருவாய் இழப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டதையொட்டி சென்னையில் கண்டக்டர்கள் இல்லாமல் ‘சுமால்’ பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #SmallBus
    சென்னை:

    சென்னையில் தமிழக அரசு சார்பில் 2013-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக ‘சுமால்’ பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் 200 ‘சுமால்’ பஸ்கள் குறுகிய சாலை தெருக்கள் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள் எளிதில் போக்குவரத்து வசதியை பெற்று பயன் அடைந்து வந்தனர். ஒரு ‘சுமால்’ பஸ்சுக்கு 2 டிரைவர், 2 கண்டக்டர்கள் ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர்.

    இந்த நிலையில் ‘சுமால்’ பஸ் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மட்டுமே வருவாய் வந்தது. பராமரிப்பு செலவு, டீசல் செலவு, டிரைவர், கண்டக்டர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளால் ‘சுமால்’ பஸ்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் ‘சுமால்’ பஸ்களில் ஏற்படும் நஷ்டம் குறித்து ஆய்வு செய்தனர். கண்டக்டர்கள் இல்லாமல் ‘சுமால்’ பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். நஷ்டத்தை சரிக்கட்ட கண்டக்டர்கள் இன்றி ‘சுமால்’ பஸ்களை இயக்க முடிவு செய்தனர்.


    வெளிநாடுகளைப் போல் ‘தானியங்கி எந்திரம்‘ மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை பொருத்தி ‘சுமால்’ பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுகம் நயினார் கண்டக்டர்கள் இன்றி ‘சுமால்’ பஸ்களை இயக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நடைமுறைக்கு இது ஒத்து வராது. மோட்டார் வாகன சட்டப்படி கண்டக்டர்கள் இன்றி ‘சுமால்’ பஸ்களை இயக்க கூடாது. டிரைவர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையை உருவாக்கும் என்று அவர் கூறி உள்ளார். #Tamilnadu #SmallBus
    Next Story
    ×