search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் - நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
    X

    புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் - நாராயணசாமி தாக்கல் செய்கிறார்

    புதுச்சேரி மாநிலத்துக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார். #PuducherryBudget
    புதுச்சேரி:

    அனைத்து மாநிலங்களிலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த நிதி ஒதுக்கீடு காலதாமதம் ஆனதால் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக சில மாத செலவினங்களுக்காக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    வழக்கம் போல் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த மாதம் 4-ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

    அதற்கு பதிலாக மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி அளிப்பது தொடர்பாக சில சந்தேகங்களை உள்துறை அமைச்சகம் எழுப்பியது. இதற்கு கடிதம் மூலமும், நேரிலும் சென்றும் முதல்- அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

    இதனால் சட்டசபை கூட்டதை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. 2 நாட்களே கூட்டம் நடைபெற்ற நிலையில் சபையை கடந்த 5-ந் தேதி காலவரையின்றி சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இருப்பினும் உடனடியாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

    சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சென்றதால் பட்ஜெட் தாக்கல் தள்ளி போனது. மத்திய அரசு அனுமதி வழங்கிய 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் சட்டசபையை ஜூலை 2-ந் தேதி கூட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவை சட்டசபை மீண்டும் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. காலை 10 மணிக்கு திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சிகளை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்குகிறார்.

    இதனையடுத்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுடன் அன்றைய தின சபை நிகழ்ச்சிகள் முடிவடைகிறது.

    நாளை மதியம் சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடுகிறது. இதில் சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    அநேகமாக பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 20-ந் தேதி வரை சுமார் 15 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் நிதி நெருக்கடி, கவர்னர் தலையீடு, இலவச அரிசி விவகாரம், துறைமுக விரிவாக்கம், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மின்மை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #PuducherryBudget #Narayanasamy
    Next Story
    ×