என் மலர்
செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு
சேலம்:
கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 81 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் 18 ஆயிரத்து 428 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து 3919 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 7500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3500 கன அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேலும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 9516 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6912 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 55.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.59 அடியாக உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.






