search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகர பஸ்சை கடத்திய 3 கல்லூரி மாணவர்கள் கைது
    X

    மாநகர பஸ்சை கடத்திய 3 கல்லூரி மாணவர்கள் கைது

    திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் சென்ற மாநகர பஸ்சை கடத்திய 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    செமஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் உள்ள கலைக்கல்லூரிகள் கடந்த வாரம் திங்கட்கிழமை திறக்கப்பட்டன.

    கடந்த காலங்களில் கல்லூரி மாணவர்கள் செய்த அநாகரீக, அட்டகாச செயல்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அத்தகைய சம்பவங்கள் நடக்க விடக்கூடாது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் ‘‘ரூட் தல’’ என்று ஒருவரை தேர்வு செய்து, அவர் தலைமையில் குழுக்களாக பிரிந்து அடாவடிகளில் ஈடுபடுவது உண்டு. அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தவும் செய்கிறார்கள். இதைத் தடுக்க கடந்த மாத இறுதியில் 75 மாணவர்களை அழைத்து போலீசார் கவுன்சிலிங் செய்தனர்.

    அவர்களது பெற்றோரிடமும் அறிவுரை வழங்கப்பட்டது. என்றாலும் கல்லூரி திறந்த முதல் நாளே சில கல்லூரி மாணவர்கள் கும்பலாக பஸ்களில் ஏறி பாட்டுப் பாடுவதும், பெண்களை கேலி செய்யும் அநாகரீகத்தில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கு முன்பு பட்டா கத்திகளுடன் சில மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். இவையெல்லாம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தன.

    அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் நேற்று சுமார் 150 மாணவர்கள் மொத்தமாக வந்து மாநகர பஸ் ஒன்றை மிரட்டி கடத்தி சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகருக்கு செல்லும் 24 சி மாநகர பஸ் நேற்று மதியம் 2 மணி அளவில் அமைந்தகரைக்கு வந்தது. அங்குள்ள கல்லூரி நிறுத்தம் அருகே பஸ் நின்றது.

    பஸ்சில் ஓரளவு பயணிகள் இருந்தனர். அந்த நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட முயன்ற போது சுமார் 150 மாணவர்கள் திபு, திபுவென ஓடி வந்து முற்றுகையிட்டனர். சுமார் 75 பேர் பஸ்சுக்குள் ஏறினார்கள்.

    டிரைவரை சூழ்ந்து நின்று கொண்ட சில மாணவர்கள் ‘‘பஸ்சை இடையில் எங்கும் நிறுத்தக் கூடாது’’. நாங்கள் நிறுத்த சொல்லும் வரை ஓட்டி செல்லுங்கள்’’ என்று மிரட்டினார்கள். டிரைவரும் கண்டக்டரும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப பஸ்சை கடத்திச் சென்றனர்.

    சுமார் 12 மோட்டார் சைக்கிள்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பஸ் முன்பு அணிவகுத்து சென்றனர். பஸ்சை அந்த மாணவர்கள் வேகமாக இயக்கவிடவில்லை. சில மாணவர்கள் பஸ் கூரை மீது ஏறி அமர்ந்தனர்.

    அமைந்தகரையை கடந்து அண்ணாநகருக்கு சென்ற போது, சில பயணிகள் இறங்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் அந்த பயணிகளை இறங்க விடவில்லை. அது போல நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏறவும் அந்த மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

    ஒரு கட்டத்தில் மாணவர்கள் பஸ் கூரையைத் தட்டி தாளம் போட்டனர். வாசலில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்கள் ஆ... ஊ... என கோ‌ஷமும், சத்தமும் போட்டப்படி வந்தனர். சாலையில் சென்ற பெண்கள், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற பெண்களை மிக, மிக அநாகரீகமாக கேலியும், கிண்டலும் செய்தனர்.

    இதற்கிடையே சில மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பாட்டு பாடினார்கள். சில மாணவர்கள் பஸ் கூரையில் வெளிச்சம் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். டிரைவருக்கும் கண்டக்டருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானது.

    நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த கண்டக்டர் தனது செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவரும் அண்ணாநகரில் பஸ்சை ஓரம் கட்டி நிறுத்தி விட்டார். அவரை மீண்டும் பஸ்சை எடுக்கும்படி மாணவர்கள் மிரட்டினார்கள்.

    ஆனால் டிரைவர் மறுத்துவிட்டார். அப்போது ஒரு மாணவர், அந்த பஸ்சை ஓட்ட முயன்றார். அப்போது போலீசார் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    போலீசை கண்டதும் பஸ் உள்ளேயும், பஸ் கூரை மீதும் அமர்ந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 மாணவர்களைப் பிடித்தனர்.

    அந்த மாணவர்கள் அண்ணாநகரை சேர்ந்த என்.தினேஷ் (19), திருவள்ளூரைச் சேர்ந்த எழிலரசன் (19), அம்பத்தூரைச் சேர்ந்த எல்.கணேசன் (18) என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் ஆவார்கள்.

    பஸ்சில் அராஜகம் செய்த சுமார் 120 மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த மாணவர்கள் அண்ணாநகர், அமைந்தகரையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    அந்த மாணவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கும்பலாக வந்து பஸ்சை கடத்தி அட்டூழியம் செய்த சம்பவம் அண்ணா நகர், அமைந்தகரை பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டறித்து கடும் தண்டனை கொடுக்காவிட்டால் மாணவர்களால் பொது மக்களும், பெண்களும் பாதிக்கப்படும் அபாயம் தொடர்ந்து விடும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×