என் மலர்
செய்திகள்

திருடன் என்று நினைத்து சீருடை அணியாமல் சென்ற போலீசாருக்கு அடி-உதை
செங்குன்றம்:
ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்தியதாக செங்குன்றம் பகுதியை சேர்ந்த 50-க்கும் அதிக மானவர்கள் மீது ஆந்திரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் 20-க்கும் அதிகமானவர்களை ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் இரவோடு இரவாக அங்கு சென்று வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு செங்குன்றம் சி.டி.மூர்த்தி நகருக்கு ஆந்திர போலீசார் 4 பேர் துப்பாக்கியுடன் சென்றனர். சீருடை அணியாமல் சென்ற அவர்கள் நக்சலைட்டுகள் என்று கருதி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தாக்கினார்கள். அதே போன்ற சம்பவம் இப்போதும் நடந்துள்ளது.
செங்குன்றம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரை செம்மரம் கடத்தியதாக தமிழக போலீஸ் உதவியுடன் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அப்போது கதிரவன் என்பவர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
அவரை பிடிப்பதற்காக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆந்திர போலீசாருக்கு உதவியாக சென்னையை சேர்ந்த போலீசார் செல்வன், பெருமாள், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு போலீஸ் சீருடை அணியாமல் செங்குன்றம் பகுதியில் வீடு புகுந்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீருடை அணியாமல் சென்ற 3 பேரும் திருடர்கள் என்று பொதுமக்கள் கருதினார்கள். எனவே அந்த பகுதி மக்களுக்கும் 3 பேருக்கும் வாக்கு வாதம் நடந்தது.
இதையடுத்து அவர்களை 100-க்கும் மேற்பட்டோர் அடித்து உதைத்தனர். உருட்டு கட்டையாலும் தாக்கினார்கள். தகவல் அறிந்ததும் சோழவரம் காவல் உதவி மையம் தலைமை காவலர் முத்துகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பொது மக்களிடம் சிக்கிய 3 பேரையும் மீட்டனர்.
விசாரித்த போது, செம்மர கடத்தல்காரரை பிடிக்க வந்த அவர்களிடம் போலீஸ் அடையாள அட்டை இருந்தது தெரிய வந்தது. பொதுமக்களால் தாக்கப்பட்ட 3 போலீசாரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.






