search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவணங்கள் மாயமானதால் 10 ஆண்டுகள் தேவையின்றி சிறையில் இருந்த தொழிலாளி
    X

    ஆவணங்கள் மாயமானதால் 10 ஆண்டுகள் தேவையின்றி சிறையில் இருந்த தொழிலாளி

    ஆவணங்கள் மாய மானதால் தேவை யில்லாமல் 10 ஆண்டுகள் தொழிலாளி ஒருவர் சிறையில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஜெயபால் என்பவர் கடந்த 1989-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். விசாரணைக்கு பின்பு அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், ஜெயபால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்திருந்த போதிலும் அவரை சிறைத்துறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. விசாரித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்த ஆவணங்கள் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தின் போது மாயமானது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜெயபாலின் மகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஜெயபாலை சிறையில் இருந்து விடுவிக்க 22.11.2017 அன்று உத்தரவிட்டது. இருந்த போதிலும் சிறைத்துறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பின்பு சமீபத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஜெயபாலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்தது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் அவர் தேவையில்லாமல் 10 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்தது. பின்னர், இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 
    Next Story
    ×