search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை அறிவித்தார். #TNAssembly #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டின் குறுவை தொகுப்புத் திட்டத்தினை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதன்படி, 1. கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

    2. குறுவை பருவத்தில் 79,285 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு 1,750/ ரூபாய் மானியம் வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிப்பதற்கு 2 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    3. வேளாண் இயந்திரங்களைக் கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக, 870 பவர் டில்லர்களும், 860 ரோட்ட வேட்டர்களும் 50 சதவீத மானியத்தில் விநியோகிப்பதற்காக, 11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



    4. டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன் படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன்வந்தால், 90 சதவீத மானியம் வழங்கப்படும். டெல்டா பகுதிகளில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்கள் நிறுவுவதற்காக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    5. மின் இணைப்பு கிடைக்கப் பெறாத டெல்டா விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 ஆயிரம் டீசல் இன்ஜின்கள், 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்குவதற்காக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இத்தகைய வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு, இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள உழவன் கைபேசி செயலி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன்.

    6. நடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கருக்கு 4,000 ரூபாய் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு இயந்திர நடவு மேற்கொள்ள, 100 சதவீத மானிய உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 40,000 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படும்.

    7. டெல்டா மாவட்டங்களில் துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், 30 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு முழு மானியமாக 600 ரூபாய் வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    8. குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக லாபம் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களை 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 60 சதவீத மானியத்தில் தரமான விதைகள், 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை மற்றும் இலை வழி டிஏபி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    9. பயறு வகைகளில், சிக்கனமாக பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில், 2000 தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குவதற்காக ஒரு கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    10. காவேரி டெல்டா மற்றும் கல்லணை பாசனத்தின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் உர பயிர் சாகுபடி 15,000 ஏக்கரில் மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 1,200/ ரூபாய் மானியத்தில் பசுந்தாளுர பயிர் விதைகள் விநியோகிக்கப்படும்.

    11. டெல்டா மாவட்ட விவசாயிகள், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், 4 அங்குல விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளத்தில் 30 பி.வி.சி. குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 1,500 அலகுகளுக்கு மானியம் வழங்குவதற்காக, 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    12. டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதன் முறையாக குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்க, அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, வாய்க்கால்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு குழி எடுத்து நடவு செய்தல், உரக்குழி அமைத்தல் போன்ற பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் மண் வரப்புகளை அமைத்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்கு டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

    இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அரசு, 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, இன்று 115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிகளை உடனடியாக துவக்குவதற்கு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வேளாண் பெருமக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு குறுவை சாகுபடியினை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த திட்டங்கள் அனைத்தும், வேளாண் பெருமக்கள் உரிய காலத்தில் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை பெறுவதற்கு அம்மாவின் அரசு துரித தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும், விரைவில் காவேரி நீர் மூலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssembly #TNCM
    Next Story
    ×