search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக லாரி ஏஜெண்டை கடத்திய கும்பல்
    X

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக லாரி ஏஜெண்டை கடத்திய கும்பல்

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக கடத்தப்பட்ட லாரி ஏஜெண்டை போலீசார் மீட்டனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் லாரி ஏஜெண்டாக உள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற தங்கராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தேடிப்பார்த்து அவரது செல்போன் எண்ணுக்கு அழைத்தார். ஆனால் அது சுவிட்ச்அப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் வேதனையில் தூங்காமல் இருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் தான் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உன் கணவர் என்னிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் இது வரை பணம் தர வில்லை. அந்த பணத்தை திருப்பி வாங்குவதற்காக அவரை கடத்தி வைத்துள்ளேன். உன்னிடம் பணம் இருந்தால் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் உன் கணவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ஜெயா மீண்டும் தனக்கு வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.

    தன்னிடம் பணம் இல்லை என்றும் அதற்கு பதிலாக தான் அணிந்துள்ள தங்க சங்கிலியை தருவதாகவும் கூறினார். ஆனால் அதற்கு நகை வேண்டாம் காலையில் பணமாக தயார் செய்து வைத்து, மீண்டும் நான் கூறும் இடத்துக்கு வந்து பணத்தை கொடுத்து விட்டு உன் கணவரை அழைத்துச் செல்லலாம் என கூறியுள்ளார்.

    இந்த உரையாடல்களை வைத்து போலீசார் கடத்தல் கும்பலை தேடினர். அவர்கள் தாராபுரம் ரோட்டில் ஒரு அறையில் தங்கராஜை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் கடத்தல் கும்பலில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து தங்கராஜை மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர்.

    கடத்தலில் ஈடுபட்டது சாத்தூர் செந்தில்குமார் (வயது 40), தாராபுரம் சத்திரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி, ரஞ்சித், கட்டையன் என தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்குமார், வேலுச்சாமியை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×