search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரின் பேச்சை கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களை முடக்குகின்றனர் - சிவா எம்.எல்.ஏ.
    X

    கவர்னரின் பேச்சை கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களை முடக்குகின்றனர் - சிவா எம்.எல்.ஏ.

    கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக சட்டசபையில் திமுக உறுப்பின் சிவா கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    சூறாவளி காற்றில் முதல்-அமைச்சர் ஆட்சி என்ற கப்பலை செலுத்தி வருகிறார். கவர்னர் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தராமல் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    ஏற்கனவே 12 ஆண்டு முதல்-அமைச்சராகவும், 24 ஆண்டுகள் அதிகார பதவியிலும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் நல்ல நிர்வாகத்தை விட்டுச் செல்லவில்லை. அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அரசுக்கு இத்தகைய கடன்சுமை இருந்திருக்காது.

    ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது பெரும் கடன் சுமை இருந்தது. நிதிநிலை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் பழி அரசு மீது விழுந்திருக்காது. அரசு நிறுவனங்களில் கடந்த காலத்தில் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் மூடுவிழா நடத்தப்பட்டு வந்தது. இந்த பழி தற்போதைய அரசு மீது விழுந்துவிட்டது.

    அரசு அதிகாரிகள் இரட்டை ஆட்சிக்கு வழி செய்வது போல செயல்படுகின்றனர். கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். வாரந்தோறும் கவர்னர் ஆய்வு செய்வதால் என்ன பலன் கிடைத்துள்ளது? 2 ஆண்டுகளாக கவர்னர் தொடர்ந்து குப்பைவாரும் பணியைத்தான் செய்கிறார். ஆனாலும் இன்று வரை நிலைமை சீராகவில்லை. புதுவையில் மட்டும் ஏற்கனவே இயங்கி வந்த 15 பொது கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளது.

    கவர்னர் எந்த வேலையை செய்தாலும் அதில் தோல்விதான். சட்டசபையில் ரோடியர் மில், சாலை போக்குவரத்து கழகம், பாப்ஸ்கோ தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முடிவு என்ன ஆச்சு? உள்ளாட்சித்துறையில் யாருக்கும் தெரிவிக்கப்படாமலேயே வரிவிதிப்பு செய்யப்படுகிறது. புதிதாக எதையும் செய்யாமல் வரி விதிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்கு எங்கும் இல்லாத அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது.

    சட்டசபை குழு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்த பின்னர் ஆலையை அரசு மூடியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டே அரவை பணிகளை தொடங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம், ரோடியர் மில், பாப்ஸ்கோ ஆகியவற்றை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிறுவனங்களில் ரூ.50 கோடி கடன் பெற பிசிஎஸ் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அரசு நிறுவனம் வழங்கும் காசோலை பணமின்றி திரும்புகிறது. இது அசிங்கமில்லையா?

    ஏனாம் பகுதிக்கு மட்டும் சுகாதார காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவை, காரைக்கால், மாகி பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காப்பீட்டு திட்டத்தில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய மருத்துவமனைக்கு பணம் செல்ல வேண்டும் என நினைத்து செயல்படுகின்றனர்.

    கவர்னர் தான் சார்ந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதால் தான் பிரச்சினைகள் உருவாகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×