search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே கோவிலில் நகை திருடி கைதான வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    முத்துப்பேட்டை அருகே கோவிலில் நகை திருடி கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

    கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை கிராமத்தில் சுக்ரீவன் வழிபட்டு வணங்கிய பழமையான சிவன்கோயில் உள்ளது. வடிவழகி என்ற சவுந்தரநாயகி அம்மன் உடனமர் சவுந்தரேஸ்வரசுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோயிலில் திருப்பணிகள் நீண்ட நாட்களாக பக்தர்கள் உதவியுடன் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலை வழக்கம்போல் பணியாளர்கள் கோவிலை திறந்து அன்றாட பூஜைக்கு தயாராகினர். அப்போது குருக்கள் பாலாஜி வந்திருந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து வந்தார். அப்போது 30வயது மதிக்கக்கூடிய வாலிபர் ஒருவர் அர்ச்சனை செய்துவிட்டு சன்னதியை சுற்றிவந்தார். இந்த வேளையில் குருக்கள் பாலாஜி பிரசாத தயாரிப்பில் ஈடுபட்டார். இதனை நோட்டமிட்ட வாலிபர் திடீரென்று கருவறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கட்டிங் பிளேடால் வடிவழகி அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயினை துண்டித்து எடுத்து கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டார்.

    இதனை பார்த்த குருக்கள் சந்தேகம் அடைந்து சாமியை பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயின் திருட்டு போனது தெரியவந்தது. குருக்கள் சத்தமிட்டு மக்களை கூப்பிட்டதும் மர்மநபர் தப்பி சென்று விட்டார்.

    இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் ஜவகர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில் அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்நிலையில் கடந்த 29-ந்தேதி காலை அறந்தாங்கியில் வைத்து மனோகரன் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், ஆயுதப்படை காவலர் பாலமுத்து ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி கைதி மனோகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல்வேறு குழுவாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர்.

    கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×