என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
    X

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை நிரந்தரமாக மூடப்படும் என்று தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #ThoothukudiFiring #OPanneerSelvam #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த 22-ந்தேதி 100-வது நாளை எட்டியது.

    அன்று போராட்ட குழுவினரும், பொதுமக்களும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    மேலும் ஏராளமானோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடாமல் டெப்போக்களில் முடங்கின. தூத்துக்குடி நகர் முழுவதும் பதட்டம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து அரசின் தீவிர நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு காரணமாக தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. பஸ்கள் வழக்கம்போல ஓடத்தொடங்கின. கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் வழக்கமான பணிகளை கவனிக்க தொடங்கினர்.

    துப்பாகி சூட்டில் காயமடைந்த 48 பேருக்கு தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவ குழுவினரும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக கலவர பகுதிகளை பார்வையிடவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறவும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

    அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு துப்பாக்கி சூட்டில் காயம்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டார். மேலும் தரமான சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்தினார்.

    அப்போது அரசு அறிவித்த நிவாரண உதவிக்கான காசோலைகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக அமைந்து விட்டது. அரசின் சார்பாக இதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். காயம் அடைந்த அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளேன். அவர்களது உடல் நலம் முழுவதுமாக தேறி நல்ல நிலைக்கு வருவார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது 2013-ம் ஆண்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூடப்பட்டது. ஆனால் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு பெற்று ஆலையை இயக்கியது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை அது நிரந்தரமாக மூடப்படும். சட்ட ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் தடுத்து ஆலையை நிரந்தரமாக மூடும் பணிகளை அரசு மேற்கொள்ளும். தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. தொடர்ந்து இந்த அமைதி நீடிக்க மாவட்ட கலெக்டரும், நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேவையில்லாமல் யாரையும் கைது செய்யும் சூழ்நிலை தற்போது இல்லை. துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ளார்கள். தொடர்ந்து அரசு தனது பணிகளை செய்து வருகிறது. பலியானவர்களின் 7 பேர் உடல்கள் நீதிமன்ற உத்தரவை பெற்று அவர்களது குடும்பத்தினர் ஒத்துழைப்போடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 47 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினேன். அப்போது அவர்கள் என்னிடம் சில கோரிக்கைகளை கூறினார்கள். அவற்றை உறுதியாக நிறைவேற்றுவோம். அரசு அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்பு தூத்துக்குடியில் கலவரத்தால் சேதமான கலெக்டர் அலுவலகம் மற்றும் தீவைக்கப்பட்ட வாகனங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் போக்குவரத்துதுறை கூடுதல் செயலர் டேவிதார், வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சந்தீப்நந்தூரி உள்ளிட்டோர் சென்றனர்.

    மேலும் சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், பகுதி செயலாளர் முருகன் மற்றும் கட்சியினர் பலரும் சென்றனர்.

    துணை முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனை முன்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ராம்பா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபட்டிருந்தனர். #ThoothukudiFiring #OPanneerSelvam
    Next Story
    ×