search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ காட்சிகளை வைத்து வீடு வீடாக சோதனை- 200 பேர் பிடிபட்டனர்
    X

    வீடியோ காட்சிகளை வைத்து வீடு வீடாக சோதனை- 200 பேர் பிடிபட்டனர்

    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.

    போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். பொதுமக்கள் தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அதில் லேசான காயம்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 5,000 பேர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி வெளித்தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தூத்துக்குடி போராட்டத்தில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்தும், தீவைப்பு- கல்வீச்சு வீடியோ காட்சிகளை வைத்தும், போராட்டக்காரர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். அதை வைத்து வீடு வீடாக போலீசார் சென்று தேடி வருகிறார்கள்.

    இதில் சிக்கியவர்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை வரை 67 பேர் பிடிபட்டனர். அவர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் ஆஸ்பத்திரிகளிலும் போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள். இதில் கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் பற்றியும் அவர்களின் உறவினர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சிலரை போலீசார் பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலையிலும் சோதனை வேட்டை தொடர்ந்தது. இதுவரை 200 பேர் சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணைக்குப் பின்னர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும், இப்போதைக்கு 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் கைது வேட்டையில் ஈடுபட்டு வருவதால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். #Thoothukudifiring
    Next Story
    ×