search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
    X

    ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.#Thoothukudi #Sterlite #SterliteProtest #BanSterlite #TalkAboutSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தற்கு கூறி உள்ள 5 குறைபாடுகளை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் எந்தவித விளக்கமும் கோராமல் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது இயற்கை நீதிக்கு புறம்பானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததற்கு 5 குறைபாடுகளை கூறி உள்ளது. இந்த குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதில், ஒரு குறைபாட்டை சரி செய்ய 2019-ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை மாசு ஏற்படவில்லை’ என்று வாதாடினர்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தங்களது முழுமையான வாதத்தை எடுத்து வைத்த பின்பு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Thoothukudi #Sterlite #SterliteProtest  #BanSterlite #TalkAboutSterlite
    Next Story
    ×