search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
    X

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்ததால் 12-வது நாளாக ஸ்டிரைக் நீடித்தது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பிரதான முக்கிய தொழில் விசைத்தறி தொழிலாகும். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு ரூ 40 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது முடிவடைந்தது. இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 300 வழங்கக்கோரி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இது பற்றி காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி முடிவு செய்யலாம் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளர் அசோக்ராஜ், நிர்வாகிகள் லெட்சுமி, சக்திவேல், சுப்பையா, புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி லெட்சுமியாபுரம் 4ம் தெருவில் இருந்து துவங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்தில் சென்றடைந்தது. பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நெல்லை தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல் காதர் கலந்துகொண்டார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உரிமையாளர்கள் தரப்பில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கூலி உயர்வு வழங்க இயலாது என தெரிவித்தனர். இதனால் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஸ்டிரைக் நீடிப்பதாக விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்தனர்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 12-வது நாளாக நீடிக்கிறது. இத‌னால் ரூ 5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 14-ந்தேதி(திங்கட்கிழமை) நெல்லை தொழிலாளர்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. #tamilnews

    Next Story
    ×