search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறியியல் கல்விக்கான ஆன்லைன் கலந்தாய்வு மோசடிக்கு வழி வகுக்கும் - ராமதாஸ்
    X

    பொறியியல் கல்விக்கான ஆன்லைன் கலந்தாய்வு மோசடிக்கு வழி வகுக்கும் - ராமதாஸ்

    பொறியியல் கல்விக்கான ஆன்லைன் கலந்தாய்வு மோசடிக்கு வழி வகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதும், கலந்தாய்வும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது களநிலவரம் தெரியாமல் எடுக்கப்பட்ட மிகவும் அபத்தமான முடிவாகும்.

    அரசு நிர்வாகமும், அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான நடவடிக்கைகளும் ஆன்லைன் முறைக்கு மாறி விட்ட நிலையில் பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதை குறை கூற முடியாது.

    ஆனால், விதைக்கும் முன் நிலத்தை பண்படுத்துவதைப் போன்று பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறைக்கு மாற்றுவதற்கு முன்பாக, அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் படுத்தியிருக்க வேண்டும். மாறாக, உயர்கல்வித் துறை செயலர் விரும்பினார் என்பதற்காக, அனைவருக்கு ஆன்லைன் கலந்தாய்வை அறிமுகப்படுத்துவது அறிவிற்கு ஒப்பாத செயலாகும்.

    ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைனில் நடப்பதால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் விருப்பம் தெரிவித்ததாகவும், அதை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ.ஐ.டிக்கு இணையாக பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இயலாத உயர்கல்வித்துறை, மாணவர் சேர்க்கை முறையை மட்டும் மாற்றுவது கடும் கேலிக்குரியதாகும்.

    பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா? என்பதை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் சேருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறை மாணவர்கள் ஆவர்.

    இவர்களுக்கு வழிகாட்ட அவர்களின் குடும்பத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவர்களால் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி நடப்பாண்டில் பொறியியல் படிக்க தகுதியுடைய 12-ம் வகுப்பு பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதிய 4,27,009 மாணவர்களில் மூன்றில் இரு பங்கினர் ஊரக மாணவர்கள் என்பதால் அவர்களால் திடீரென திணிக்கப்பட்ட ஆன்லைன் முறையை எதிர்கொள்ள முடியாது.

    பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாளில் இருந்து, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக தனியார் பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக விளம்பரம் அளித்து வருகின்றன. 12-ம் வகுப்புத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, செல்பேசி, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வந்தால் ஆன்லைனில் விண்ணப்பித்துத் தருவதாக சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல கல்லூரிகள் விளம்பரம் செய்துள்ளன.

    அவ்வாறு வரும் மாணவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் கல்லூரி அல்லது தங்களுக்கு வேண்டியவர்களின் கல்லூரிகளில் சேர வைப்பது தான் தனியார் கல்லூரிகளின் திட்டமாகும்.

    ஆன்லைன் முறையில் அல்லாமல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடத்தினால், அங்கு கலந்தாய்வுக்கு வரும் பெற்றோர்கள், மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள் சிறப்பான ஆலோசனை வழங்குவார்கள். இருக்கும் கல்லூரிகளில் எவை சிறந்தவை அவற்றில் எந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என வழிகாட்டுவார்கள்.

    ஆனால், ஆன்லைன் முறையில் இது சாத்தியமில்லை. அதுமட்டுமின்றி, தனியார் கல்லூரிகளின் உதவியை நாடும்போது, அவர்கள் சுய நலத்துடனும், வணிக நோக்கத்துடனும் தவறான வழிகாட்டக்கூடும் என்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசின் ஆன்லைன் கலந்தாய்வு முறை, மாணவர்களை தனியார் கல்லூரிகள் வளைப்பதற்கு மட்டுமே உதவியாக உள்ளது.

    இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், குறைந்தபட்சம் ஆன்லைன் கலந்தாய்வு முறையையாவது ரத்து செய்து, கடந்த காலங்களைப் போலவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேரில் பங்கேற்கும் வகையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #tamilnews

    Next Story
    ×