search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஓ.பி. வங்கி கொள்ளையில் சிலிண்டரை எடுத்து வந்த கார் டிரைவர் சிக்கினார்
    X

    ஐ.ஓ.பி. வங்கி கொள்ளையில் சிலிண்டரை எடுத்து வந்த கார் டிரைவர் சிக்கினார்

    ஐ.ஓ.பி. வங்கி கொள்ளையில் சிலிண்டரை எடுத்து வந்த கார் டிரைவர் சிக்கினார். மேலும் 2 காவலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியில் கடந்த 26-ந்தேதி லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் விசாரணையில் ரூ.30 லட்சம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. 2 லாக்கர்களை மட்டுமே உடைத்து கொள்ளையர்கள் நகைகளை திருடிச் சென்றிருந்தனர். வெளிநாட்டில் வசித்து வந்த சுசித்ரா என்பவர் தனது லாக்கரில் 130 பவுன் நகை இருந்ததாக தெரிவித்துள்ளார். இதே போல மரியா என்பவரின் இன்னொரு லாக்கரில் 5 பவுன் நகை மட்டுமே இருந்ததும் கண்டு பிடிக் கப்பட்டது.

    வங்கி லாக்கர்களை உடைக்க பிரத்யேகமான கியாஸ் சிலிண்டர்களை கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர். காவலாளி சபீன்லால், அவரது மகன் திலு ஆகியோருடன் சேர்ந்து 6 பேர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவர்கள் அனைவரும் அமைந்தகரையில் உள்ள கியாஸ் ஏஜென்சி ஒன்றில் 4 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி உள்ளனர். பெரிய எல்.பி.ஜி. சிலிண்டரையும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கியாஸ் தீர்ந்து போனதால் மற்ற லாக்கர்களை எதையும் உடைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின.

    நேபாளத்தை சேர்ந்த காவலாளி சபீன்லால் வடமாநில கொள்ளையர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பெங்களூரை சேர்ந்த கொள்ளையர்கள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    கொள்ளையர்களில் சிலர் பெங்களூரில் வீடு எடுத்து தங்கி காவலாளி சபீன்லாலுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    கொள்ளையர்களை தேடி நேபாளத்துக்கு 3 தனிப்படைகள் சென்றிருந்த நிலையில் பெங்களூரிலும் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் கொள்ளை வழக்கில் துப்பு துலங்கியது. பெங்களூரில் பதுங்கிய கொள்ளையர்கள் அங்கு வீடு எடுத்து தங்கியதும், போலியான முகவரி சான்றிதழ்களை கொடுத்து சிம்கார்டு வாங்கியதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து பெங்களூர் போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் களத்தில் குதித்தனர். இதற்கு பலன் கிடைத்தது. கியாஸ் சிலிண்டர்களை காரில் ஏற்றி செல்வதற்கு உதவிய டிரைவர் ரமேஷ் என்பவர் பெங்களூரில் சிக்கினார். அதே நேரத்தில் ராமாபுரம், அண்ணா நகரில் பணிபுரிந்து வந்த நேபாளத்தை சேர்ந்த 2 காவலாளிகளும் பிடிபட்டுள்ளனர். ஹீராராம், ஹரிபகதூர் ஆகிய 2 காவலாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் கொள்ளையன் சபீன்லாலின் பக்கத்து ஊர் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டிரைவர் ரமேசை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டாளி ரமேஷ் பிடிபட்ட நிலையில் வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட காவலாளி சபீன்லால், திலு ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    அவர்கள் இருவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிரைவர் ரமேசிடமும், 2 காவலாளிகளிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நேபாளம் சென்ற தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் சென்னை திரும்பியுள்ளனர். #tamilnews
    Next Story
    ×