என் மலர்
செய்திகள்

போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
திருச்சி:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா மலைக்கோ விலூரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர் சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். முருகானந்தம் சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வரவே, போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், முருகானந்தத்துக்கு சொந்தமான திருச்சி, கரூர், கோவையில் உள்ள 3 வீடுகளிலும் சோதனையிட அனுமதி கோரினர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி, நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோர் கொண்ட குழுவினர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த முருகானந்தத்தின் மனைவி மற்றும் 2 மகன்கள் வெளியே செல்வதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை.
பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், வீட்டு மனை பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அது குறித்து முருகானந்தம் குடும்பத்தினரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் வரை இந்த சோதனை நடை பெற்றது.

இதேபோல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் உள்ள முருகானந்தத்தின் வீடு மற்றும் கோவையில் உள்ள மற்றொரு வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
திருச்சி வீட்டில் சோதனை முடிந்ததும் வெளியே வந்த போலீசார் நிருபர்களிடம் கூறும் போது, முருகானந்தம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வீட்டில் சோதனை நடத்தியுள்ளோம். திருச்சியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.50 லட்சம் மதிப்புள்ள 223 பவுன் தங்க நகைகள், 1¼ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், வீட்டுமனை பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவை சிக்கியுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம். முருகானந்தத்திடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்றனர்.
இதில் முக்கிய ஆவணங்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சென்றனர். மற்றவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. #tamilnews






