என் மலர்
செய்திகள்

ஆரணியில் ஜெயலலிதா சிலை வைக்க தி.மு.க. கொடி கம்பம் உடைப்பு
ஆரணி:
ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே சிமெண்ட்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை இருந்தது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் கொடி கம்பங்கள் பெயர் பொரிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்தன.
இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலையை அ.தி.மு.க.வினர் வெண்கல சிலையாக புனரமைத்தனர். இன்று காலை எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்தனர்.
இதற்கிடையே, நேற்று நள்ளிரவு ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை அனுமதியின்றி யாருக்கும் தெரியாமல் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே அவசர, அவசரமாக அ.தி.மு.க.வினர் நிறுவினர்.
ஜெயலலிதா சிலையை வைப்பதற்காக, எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க கொடி கம்பங்களை உடைத்து அகற்றியுள்ளனர். கல்வெட்டுகளையும் இடித்துள்ளனர்.
இன்று காலை எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளை மறைத்து கட்டி இருந்த கோணி பைகளை அ.தி.மு.க.வினர் திறந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தகவலறிந்த தி.மு.க.வினர் ஆத்திரமடைந்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிறகு, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கடப்பாரையுடன் ஜெயலலிதா சிலையை இடிக்க போவதாக கூறி பஸ் நிலையம் அருகே சென்றனர்.
மாவட்ட செயலாளர் சிவானந்தம் கடப்பாரையால் சிலையை உடைக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினர்.
அந்த நேரத்தில், ஜெயலலிதா பிறந்தாளை முன்னிட்டு பேரணி சென்ற 100-க்கும் மேற்பட்ட அ.தி. மு.க.வினர் சிலைகளை பாதுகாப்பதற்காக திரண்டு வந்தனர்.
அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்பட கூடிய பதட்டமான சூழல் நிலவியது. போலீசார், இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க.வினர் பேரணியை தொடர்ந்தனர். தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. #tamilnews