என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.66 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    அதே போல கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நடந்த முகாமில் கலெக்டர் கதிரவன் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 336 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 888 மையங்களிலும், 2 நகராட்சி பகுதிகளில் 63 மையங்களிலும் என மொத்தம் 951 மையங்களில் நடக்கிறது.

    இதற்காக 55 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகர் நல மையங்கள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2 லட்சத்து 15 ஆயிரம் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்துகளை பாதுகாக்க உரிய குளிர்சாதன பெட்டிகள் அனைத்து மையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 3 ஆயிரத்து 804 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கு முகாமை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். #tamilnews 
    Next Story
    ×