என் மலர்
செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை:
கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரெயிலில் 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று பயணித்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரெயில் நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் கீழே இறங்கினர். பின் திடீரென அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்டதால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
கத்தி, அரிவாள், உருட்டுக் கட்டைகளுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவர் ஒருவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
இதன் பின்னர் அரிவாளால் வெட்டிய எதிர் கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவரை அவரது நண்பர்களான சக மாணவர்கள் மீட்டனர். பின்னர் வெட்டுபட்ட மாணவர் அங்கிருந்த தண்ணீர் குழாயில் ரத்தத்தை கழுவினார். பின்னர் வெட்டுபட்ட மாணவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெட்டுபட்ட மாணவர் யார்? அவரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.